இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் மட்டும் 2000 கிலோ கடத்தல் தங்கம் விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் எப்போதுமே தங்கத்துக்கான தேவை அதிகமாக இருக்கிறது. இதனால் தேவையை பூர்த்தி செய்ய தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே சமயம் தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு அதிக வரி விதிக்கிறது. இதனால் வெளிநாட்டு சந்தையை காட்டிலும் உள்நாட்டில் தங்கத்தில் விலை அதிகமாக உள்ளது.
இதனால், கடத்தல்காரர்கள் துபாய் போன்ற வெளிநாட்டு சந்தைகளில் இருந்து தங்கத்தை வாங்கி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்கள். இதனைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இருப்பினும், கடத்தல்காரர்கள் புதுப்புது வழி முறைகளில் தங்க கடத்தலை மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் சார்பில் 2 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை காட்டிலும் 43 சதவீதம் அதிகம். இதில் பெரும்பாலும் மியான்மர், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் இருந்து இந்தியாவுக்கு கடத்திவரப்பட்டது. முன்னதாக, 2021-22 ம் ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் 1,400 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 2000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டில் நாட்டில் அதிக அளவாக கேரளா மாநிலத்தில் 755.81 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் 535.65 கிலோவும், தமிழ்நாட்டில் 519 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.