20 பெண்கள் பாலியல் வன்கொடுமை: காதலியால் சிக்கிய மாடலிங்

20 பெண்கள் பாலியல் வன்கொடுமை: காதலியால் சிக்கிய மாடலிங்

இன்ஸ்டாகிராம் மூலம் 20க்கும் மேற்பட்ட இளம் பெண்களை காதல் வலையில் விழவைத்து பாலியல் வன்கொடுமை செய்த துணை நடிகரும் மாடலிங்குமான முகமது சையத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது சையத் (27). இவர் மாடலிங் மற்றும் சினனத்திரையில்

துணை நடிகராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களாக ஓட்டேரி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட முகமதுசையத் அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதே நேரத்தில் முகமதுசையத் இன்ஸ்டாகிராமில்

பதிவிடும் மாடல் புகைப்படங்களை பார்த்து தன்னிடம் பேசவரும் பெண்களிடமும் ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் சிக்க வைத்து பின்னர் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவர்களிடமிருந்து அவ்வப்போது ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்று சொகுசு வாழ்க்கைக்காக செலவு செய்து வந்துள்ளார்.

இவ்வாறு முகமதுசையத் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் தனது காதலியான ஓட்டேரி பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு முகமது சையத் ஈ.சி.ஆர் பகுதிக்கு அழைத்து சென்று அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, எதேச்சையாக முகமது சையத்தின் செல்போனை வாங்கிப் பார்த்த காதலி, பல பெண்களுக்கு காதல் வலை வீசி குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து அதுபற்றி காதலனிடம் எதுவும் கேட்காமல் சம்மந்தப்பட்ட 2 பெண்களின் இன்ஸ்டாகிராம் ஐ.டி-க்களை மட்டும் குறித்து வைத்து கொண்டு பின்னர் அவர்களிடம் தனித்தனியாக பேசிய போது தனது காதலன் முகமதுசையத்தின் காதல் சித்து விளையாட்டுகள் காதலிக்கு தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து 3 இளம் பெண்களும் முகமதுசையத் தங்களை காதலிப்பதாக ஏமாற்றி, தங்கள் அனைவரையும் தனது பாலியல் வன்கொடுமைக்கு பயன்படுத்தி கொண்டதாகவும், மேலும் தனித்தனியாக தங்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸார் மாடல் முகமது சையத்தை கைது செய்து, அவரது காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், தான் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை எனவும், அனைவரும் சொந்த விருப்பத்துடன் தான் தன்னிடம் நெருங்கி பழகியதாக முகமதுசையத் போலீஸில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 3 புகார்கள் மட்டுமே பெறப்பட்டுள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் இதேபோல் 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் முகமதுசையத் தனது காதல் சித்து விளையாட்டை விளையாடியுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளது போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட வாலிபர் முகமதுசையத்தை போலீஸார் மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின் எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் முகமதுசையத்தை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக போலீஸார் தெரிவத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in