விக்னேஷ் கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது: சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை

தலைமை காவலர் முனாஃப்
தலைமை காவலர் முனாஃப்

விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கடந்த மாதம் 19-ம் தேதி கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி வைத்திருந்ததாக பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விக்னேஷ் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் தாக்கியதே விக்னேஷின் மரணத்துக்குக் காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் பவுன்ராஜ் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்தும், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். பின்னர் வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி சரவணன் நியமிக்கப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில், விக்னேஷ் உடலில் தாக்கப்பட்ட 13 காயங்கள் இருந்ததாகவும், குறிப்பாக அவரது தலையில் 1 செ.மீ அளவில் துளை போன்ற காயம் இருந்ததாகவும், இடது காலில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தது சி.பி.சி.ஐ.டி.

இந்நிலையில், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார், உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படை வீரர் தீபக், உதவி ஆய்வாளர் கணபதி, நிலைய எழுத்தர் முனாஃப், வாகன ஓட்டுநர் கார்த்திக், தலைமை காவலர் குமார், மகளிர் காவலர் ஆனந்தி ஆகியோர் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் 12 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் விக்னேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக டி.ஜி.பி-க்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 9 காவலர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முதற்கட்டமாக எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகியோர் விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் பின்னர் இருவரையும் கைது செய்தனர்.

குறிப்பாக வாகன சோதனையின் போது விக்னேஷை காவலர் பவுன்ராஜ் தாக்கியதும், பின்னர் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து எழுத்தர் முனாஃப் தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சி.பி.சி.ஐ.டி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in