டேட்டிங் செயலியால் வாழ்க்கையை தொலைத்த துணை நடிகை

பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் சிறையிலடைப்பு
டேட்டிங் செயலியால் வாழ்க்கையை தொலைத்த துணை நடிகை
கண்ணதாசன்

வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து, நகை, பணத்தை, கொள்ளையடித்து சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். டேட்டிங் செயலி மூலம் நடிகையிடம் பேசி பழகி அவரது தகவல்களை பெற்று கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சினிமா துணை நடிகை நேற்று முன்தினம் நள்ளிரவு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத இருவர் தன்னை கத்தியை காட்டி மிரட்டி 50 ஆயிரம் பணம், 10 கிராம் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார். இதையடுத்து சம்பவயிடத்திற்கு சென்று காவல்துறையினர், நடிகையிடம் விசாரணை நடத்தினர். அப்போது கத்தியுடன் வந்த நபர்கள் மிரட்டியதால் தன்னால் கூச்சலிட்டு உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை எனவும், கத்தி முனையில் மிரட்டி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு நகை, பணத்தை, பறித்து சென்றதாக நடிகை புகார் அளித்தார்.

செல்வக்குமார்
செல்வக்குமார்

இதையடுத்து வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி மற்றும் செல்போன் நெட்வொர்க் உதவியுடன் மதுரவாயல் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் மற்றும் வளசரவாக்கத்தை சேர்ந்த கண்ணதாசன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பாதிக்கப்பட்ட துணை நடிகை, கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த சில வருடங்களாக தனியாக வாழ்ந்து வருகின்றார். மேலும் அவ்வப்போது கிடைக்கும் சினிமா வாய்ப்புகளில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை, டேட்டிங் செயலியில் தனது செல்போன் எண்ணை பதிவு செய்து வைத்துள்ளார். அந்த செயலி மூலம் நடிகையை தொடர்பு கொண்ட கண்ணதாசன், வேறு பெயரில் நட்பாக பேசி நடிகையுடன் பழகிவந்துள்ளார்.

பின்னர் நடிகையின் சுய விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு, அவர் தனியாக இருக்கும் தகவலை அறிந்துள்ளார். பின்னர், தனது நண்பர் செல்வகுமாருடன் நடிகையின் வீட்டிற்குள் நுழைந்து கத்தி முனையில அவரை மிரட்டி, வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், 10 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் கத்திமுனையில் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவர்களது செல்போனில் நடிகையை ஆபாசமாகவும் படம் பிடித்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கண்ணதாசன், செல்வக்குமார் இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை, கொள்ளை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in