பரபரப்பு: துப்பாக்கியுடன் ரீல்ஸ் வெளியிட்ட 17வயது சிறுமி கைது!

கைத்துப்பாக்கியுடன் சிறுமி
கைத்துப்பாக்கியுடன் சிறுமி

பீகாரில் கையில் துப்பாக்கியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 17 வயது சிறுமி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இந்த சிறுமி, இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிடுவதில் ஆர்வம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இவரது இன்ஸ்டா கணக்கை சுமார் 13,000 பேர் பின் தொடர்கிறார்கள்.

இந்த நிலையில், அவர் இரண்டு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ஒன்றில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் ஸ்ட்ண்ட் செய்தும், மற்றொன்றில் கைத்துப்பாக்கியுடனும் அவர் காட்சி தந்துள்ளார். இந்த ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையறிந்த சைபர் கிரைம் போலீஸார் கைத்துப்பாக்கி வைத்திருக்கும் அந்த பெண்ணின் வீடியோவை ஆய்வு நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்து கைத்துப்பாக்கியை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், இந்த சிறுமி வீடியோவில் பயன்படுத்திய ஆயுதம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சாஹேப்கஞ்சை தளமாகக் கொண்ட ‘ரீல்ஸ் ஸ்டார்ஸ் குரூப்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர் என்று சிறுமி கூறியுள்ளார். அந்த குழு மூலம் அவளைச் சந்தித்த இரண்டு இளைஞர்கள் அவளுக்கு கைத்துப்பாக்கியை வழங்கியுள்ளனர். இந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ரீல்ஸ் தயாரிக்கப் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக தனது படிப்பை நிறுத்த நேரிட்டதாகவும், அவர்களுக்கு ஆதரவாக ரீல்ஸ் தயாரிக்கத் தொடங்கியதாகவும் சிறுமி காவல்துறையினரிடம் கூறியுள்ளார். ரீல்ஸ் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை சம்பாதிப்பதாக அந்த சிறுமி கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in