கேரள மாநிலம் மலப்புரம் அருகே நடுநிலை பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர், 16 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியை திறந்து பார்த்தபோது இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே கருளாயி என்ற பகுதியில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. அதில் அந்த பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவ, மாணவிகள், தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக சமீபத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டது. வாரத்திற்கு ஒரு முறை ஆசிரியர்கள், இந்த பெட்டியை திறந்து மாணவர்களின் குறைகளுக்கு தீர்வு காண்பார்கள்.
நேற்று வழக்கம்போல இந்த புகார் பெட்டியை திறந்து அதில் இருந்த கடிதங்களை படித்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளியில் பணிபுரியும் வல்லப்புழா பகுதியை சேர்ந்த முகம்மது நவ்ஷார் என்கிற ஆசிரியர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 16 மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். 16 பேரும் ஒரே ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டிருந்தது மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து உடனடியாக மலப்புரம் போலீசுக்கு பள்ளி ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று புகார் எழுதிய ஒரு மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் கடந்த மாதம் 20ம் தேதி ஆசிரியர் முகம்மது நவ்ஷார், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து ஆசிரியர் நவ்ஷார் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக புகார் எழுதிய மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே, தலைமறைவான ஆசிரியர் நவ்ஷாரை போலீசார் தேடி வருகின்றனர்.