குவாரி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

குவாரி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
நெல்லை குவாரி விபத்து படம்: லெட்சுமி அருண்

திருநெல்வேலி குவாரி விபத்தில் பலியான இருவர் குடும்பத்திற்கும் தலா 15 லட்சம் நிதி உதவியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் பின்னரேனும் நெல்லை மாவட்டத்தில் முறைகேடாக இயங்கும் குவாரிகளைக் கண்காணிக்கவும், அனுமதி விசயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கடைபிடிக்கவும் வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்கோப்புப் படம்

திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 14-ம் தேதி இரவு 350 அடி ஆழம் கொண்ட இந்தக் கல்குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தபோது பாறைகள் சரிந்து விழுந்தன. அப்போது பணியில் இருந்த செல்வகுமார் (30), ராஜேந்திரன் (35), செல்வம் (27), விஜய் (27), ஆயன்குளத்தைச் சேர்ந்த முருகன் (23), மற்றொரு முருகன் (40) என்னும் ஆறு தொழிலாளர்கள் பாறை இடுபாடுகளில் சிக்கினர். இதேபோல் குவாரியில் இருந்து கல் ஏற்றிக்கொண்டிருந்த இரு லாரி, ஜேசிபி இயந்திரங்களும் சேதமாகின. இதில் முதலில் லேசான காயங்களுடன் முருகன், விஜய் இருவரும் மீட்கப்பட்டனர். 17 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் மூன்றாவதாக செல்வம் என்பவர் மீட்கப்பட்டு, நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதேபோல் நான்காவதாக மீட்கப்பட்ட மற்றொரு முருகனும் உயிர் இழந்தார்.

இரண்டு தொழிலாளர்களின் உயிர் குடித்த குவாரி விவகாரத்தில் முன்னீர்பள்ளம் போலீஸார், குவாரி உரிமையாளரான சங்கர நாராயணனை ஏற்கெனவே கைது செய்திருந்தனர். இதேபோல் குவாரி மேலாளர் ஜெபஸ்டியானும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குவாரி விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் நிவாரண உதவித்தொகை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் கடந்த 14-ம் தேதி அன்று திடீரென மிகபெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் மீட்கப்பட்டு இப்போது சிகிச்சையில் உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்த விபத்தில் ஆயர்குளத்தைச் சேர்ந்த முருகன் (23), இளையார்குளத்தை சேர்ந்த செல்வன் ஆகிய இருவரும் உயிர் இழந்துவிட்டனர் என்னும் வேதனையான செய்தி இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தவிபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் தலா பத்துலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர தொழிலாளர் நலவாரியம் மூலமாக தலா 5 லட்ச ரூபாய் வழங்கப்படும்”எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in