உஷார்... இந்தியர்களிடம் ரூ.1,400 கோடியைச் சுருட்டிய சீனர்! செல்போன் மூலம் நூதன திருட்டு!

கால்பந்து சூதாட்ட செயலி
கால்பந்து சூதாட்ட செயலி

இந்தியாவில் 1, 200 பேரிடம் கடந்த 9 நாட்களுக்குள் சீனா நாட்டைச் சேர்ந்த சூதாட்ட செயலி மூலமாக ரூ.1,400 கோடிகளை மோசடி செய்துள்ள விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் கோடிக்கணக்கான ரூபாயை இழந்து வருகின்றனர். பணத்தை இழந்த பலர் உயிரை மாய்த்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஒருவர், 1,200 இந்தியர்களிடம் கால்பந்தாட்ட சூதாட்ட செயலி மூலமாக 1,400 கோடி ருபாயை சுருட்டிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சூதாட்ட செயலி மூலம் நடைபெற்ற இந்த மோசடி குறித்து சிறப்பு புலனாய்வு குழுவை குஜராத் காவல்துறை அமைத்தது. அப்போது தான், சீனாவின் ஷென்சென் பகுதியைச் சேர்ந்த வூ உயன்பே என்பவர் இந்தியாவைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

15 வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் மீது கவனம் செலுத்தி, அவர்களிடமிருந்து தினமும் ரூ.200 கோடியை இந்த செயலி மூலம் அவர்கள் சுருட்டியுள்ளனர்.

ஒன்பது நாட்களுக்குப் பிறகு, இந்த செயலி திடீரென வேலை செய்யாததை அடுத்து தங்கள் பணம் மோசடி செய்யப்பட்டதை மக்கள் உணர்ந்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து குஜராத் போலீஸார் கூறுகையில்," சீனாவின் ஷென்சென் பகுதியைச் சேர்ந்த வூ உயன்பே என்பவர் கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ளார். அப்போது மக்கள் பலர் செல்வச் செழிப்புடன் இருப்பதைப் பார்த்து இந்தியர்கள் சிலருடன் சேர்ந்து சூதாட்ட செயலி ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த செயலில் பணம் கட்டுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்த செயலியை உருவாக்கி 9 நாட்களுக்குள் 1,200 பேரிடம் சுமார் ரூ.1,400 கோடி மோசடி செய்துள்ளார்" என்றனர்.

சூதாட்ட செயலி மூலம் இந்தியர்களிடமிருந்து 1,400 கோடி ரூபாயை சீனாவைச் சேர்ந்தவர் சுருட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in