
உத்தரபிரதேச மாநிலத்தில் உடல்நல குறைப்பாட்டால் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக் கொண்ட 14 சிறுவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலமீசியா என்னும் ரத்த மரபணு குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்த உற்பத்தி குறைவாக இருப்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் ரத்தம் ஏற்றிக்கொள்வது வாடிக்கை. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் தலமீசியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. அதில் 14 குழந்தைகள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவர்களின் காய்ச்சல் குறித்து அறிய நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 பேருக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தலமீசியாவுக்காக கான்பூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக்கொண்டதும், அதன் காரணமாகவே இவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. மேலும், அவர்களுக்கு எச்.ஐ.வி மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்த தானம் பெறும்போது கொடையாளியின் ரத்தத்தை முறையாக சோதனை செய்யாமல் பெற்றதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையில் இதுபோல சுமார் 180 பேர் ரத்தம் பெற்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.