பகீர்... சிறுமியின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பி... உடலெங்கும் பற்காயம்... அறங்காவல் அலுவலர்கள் கைது!

பலாத்காரம்
பலாத்காரம்

11 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவை உலுக்கிய டெல்லி நிர்பயா கூட்டு பலாத்கார சம்பவத்துக்கு இணையான கொடூரம், மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டம், மைஹர் நகரில் பிரசித்தி பெற்ற ’மா சராதா தேவி’ கோயில் உள்ளது. இந்த கோயிலின் அறங்காவல் அலுவலர்களாக இருப்பவர்கள் ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் பந்தோலியா. 30 வயதுகளில் இருக்கும் இவர்களிருவரின் ஆன்மிக ஈடுபாடு காரணமாக அப்பகுதியினரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இவர்களிருவரும் 12 வயது சிறுமி ஒருவருக்கு சொல்லில் அடங்காத சித்திரவதைகளை நிகழ்த்தி இருக்கின்றனர் என்பதை, மைஹர் நகரத்தினர் இன்னமும் நம்ப முடியாது தவிக்கின்றனர். பாலியல் குற்றவாளிகள் இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே, இருவரையும் பணி நீக்கம் செய்திருக்கின்றனர்.

கடந்த வியாழன்று 12 வயது சிறுமியை ஒதுக்குப்புறமாக கடத்திச் சென்ற இருவரும், மனிதத்தன்மை இழந்து கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமியின் உடலெங்கும் பற்காயங்கள் ஏற்பட்டதோடு, சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பியாலும் குத்தியுள்ளனர். இதனால் சிறுமிக்கு ரத்தப்போக்கு அதிகரிக்கவே, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

அப்பகுதியைக் கடந்து சென்ற சிலர், சிறுமியின் அபயக்குரல் கேட்டதும், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கூட்டு பாலியல் பலாத்காரமும், இரும்பு கம்பியை பயன்படுத்தியதுமாக மத்திய பிரதேசத்தின் மைஹர் சம்பவத்தை, டெல்லி நிர்பயா கொடூரத்துடன் ஒப்பிட்டு மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த சில மணி நேரங்களில் ரவீந்திர குமார் ரவி, அதுல் பந்தோலியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பலாத்காரம், கூட்டு பாலியல் பலாத்காரம், போக்சோ, அபாயகர ஆயுதங்களால் துன்புறுத்தியது என்பது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்மிகத்தின் போர்வையில் மறைந்திருந்த பலாத்கார கொடூரர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி தற்போது அபாயகட்டத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in