அதிக கட்டணம்... ரூ.27.67 லட்சம் அபராதம்... 102 ஆம்னி பஸ்கள் பறிமுதல்; அதிகாரிகள் அதிரடி

அதிக கட்டணம்... ரூ.27.67 லட்சம் அபராதம்... 102 ஆம்னி பஸ்கள் பறிமுதல்; அதிகாரிகள் அதிரடி

தொடர் விடுமுறையை பயன்படுத்தி கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட 102 ஆம்னி பேருந்துகளை தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வருகிறது. இதனால், சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த 20ம் தேதி சொந்த ஊருக்கு மக்கள் புறப்பட்ட நிலையில் ரயில் மற்றும் அரசுப் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியதால் வசதி படைத்தவர்கள் ஆம்னி பேருந்துகளில் செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஆம்னி பேருந்துகளில் செல்வோர் கட்டணங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வேறு வழி இல்லாமல் வசதி படைத்தவர்கள் ஆம்னி பேருந்தில் பயணம் மேற்கொண்டனர்.

இதனிடையே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தமிழக போக்குவரத்துத்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் களமிறங்கி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகளிடம் கூடுதல் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 102 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 1,545 பேருந்துகள் விதிகளை மீறியது கண்டறிக்கப்பட்டு ரூ.27.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியிருப்பதால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை குளிர்சாதன வசதியில்லா பஸ்கள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள், பிரீமியம் வகை பேருந்துகள் ஆகியவற்றில் இருக்கை, படுக்கை வசதி கொண்டவை என 6 வகையான பேருந்துகள் உள்ளன. எனவே, ஒவ்வொரு வழித் தடத்துக்கும் கட்டணம் வேறுவிதமாக இருக்கும். பேருந்துகளின் தரம் மற்றும் வசதியை பொறுத்து பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் விருப்பப் படி பேருந்துகளை முன்பதிவு செய்கின்றனர். இந்தப் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணம் ஒரு ஆண்டுக்கு சராசரியாக அந்த பேருந்துகளைப் பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் போதுமானதாக இல்லை. எனவே, இந்த தொழிலுக்கு எந்த பெரிய நிறுவனங்களும் வருவதில்லை. இந்தத் தொழிலில் இருப்பவர்கள் மட்டுமே வேறு வழியில்லாமல் செய்து வருகின்றனர்.

ஆம்னி பேருந்துகளுக்கென்று மத்திய மற்றும் மாநில அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயம் கிடையாது. இருந்த போதிலும் பயணிகளின் நலன் கருதியும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணமும் சங்கங்களே அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்து உள்ளோம். ஆம்னி பேருந்துகள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் இடம் பெற்று உள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டணம் சம்பந்தமான புகார்களை 90433 79664 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in