பகீர்.. ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு... ரூ.2.32 கோடி, 1கிலோ தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல்

பிடிபட்ட பணம், தங்கம்
பிடிபட்ட பணம், தங்கம்

ராஜஸ்தானில் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.32 கோடி ரொக்கம், ரூ. 64 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் முழுவதும் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. குறிப்பாக ஜெய்ப்பூர், அல்வார், நீம்ரானா, பெஹ்ரோர், ஷாபுரா போன்ற நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், ரூ.2.32 கோடி ரொக்கம், ரூ. 64 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க பிஸ்கெட், டிஜிட்டல் சான்றுகள், ஹார்ட் டிஸ்க்குகள், மொபைல் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

முன்னதாக ராஜஸ்தான் மாநில அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், அமலாக்கத்துறை விரிவான விசாரணை நடத்தி இந்த ரெய்டை நடத்தியுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்ட பல்வேறு டெண்டர்களில் நடந்த முறைகேடுகளை மறைத்தல், சட்ட விரோத பாதுகாப்பு, டெண்டர்கள் பெறுதல், முறைகேடுகளை மறைக்க அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in