சாலையில் மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்; இரு தரப்பினரிடையே மோதல்

அரசியல் பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பரபரப்பு
சாலையில் மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்; இரு தரப்பினரிடையே மோதல்
சேதத்துக்குள்ளான கார்

சென்னையில், அரசியல் பிரமுகரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், சாலையில் காரில் அமர்ந்து மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட இளைஞர் சரமாரியாகத் தாக்கப்பட்டார். இதையடுத்து திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கும் அந்தப் பகுதி மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலை, பனையூர், என்.ஆர்.அவென்யூவில் முக்குலத்தோர் புலிப்படையின் மாநில இளைஞர் அணிச் செயலாளரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (செப்.12) இரவு நடைபெற்றது.

இதையொட்டி சாலையில் பந்தல் அமைத்து உணவு பரிமாறப்பட்டது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர், என்.ஆர்.அவென்யூ சாலையில் காரை நிறுத்தி மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது, பணிமுடித்து தனது வாகனத்தில் அந்த வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த பனையூரைச் சேர்ந்த கவின்(21), சாலையில் சிலர் மது அருந்துவதைப் பார்த்து ஹாரன் அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், கவினைச் சரமாரியாகத் தாக்கினர்.

உடனே, அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து அந்தக் கும்பலிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென 50-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடி நாற்காலி, பீர் பாட்டில், உருட்டுக் கட்டை, கற்கள் போன்றவற்றால் அவர்களைத் தாக்கத் தொடங்கினர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்து. இதில், பனையூர் குப்பத்தைச் சேர்ந்த சுரேந்தர்(28) பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சேதப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம்
சேதப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம்

இச்சம்பவத்தில் ஒரு பைக் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், 2 கார்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். கலவரம் காரணமாக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த காவல் துறை உயர் அதிகாரிகள் கலவரம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த விவரங்கள் கானத்தூர் போலீஸார் திரட்டிவருகின்றனர்.

Related Stories

No stories found.