அதிர்ச்சி; கார்களில் சிக்கிய ரூ.2 கோடி செம்மரக்கட்டைகள்: சென்னையைச் சேர்ந்த 5 பேர் கைது!

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள்.

ஆந்திரா மாநிலம், சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்திய 5 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திரா - தமிழக எல்லைப்பகுதியான சூலூர் பேட்டை அருகே நேற்று இரவு ஆந்திரா போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த இரண்டு கார்களை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

அதில், சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட 5 டன் எடை கொண்ட செம்மர கட்டைகள் மற்றும் செம்மர பவுடர் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

அவற்றை உடனடியாக பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முருகன், ஹேமந்த் குமார், ரவி, விமல், சுரேந்தர் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் ஆந்திராவில் இருந்து செம்மரங்களைக் கடத்தி சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மஞ்சள் தூள் ஏற்றுமதி செய்வது போல் செட்டப் செய்து லாரிகள் மூலம் மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பியது தெரிய வந்தது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் முருகன் மீது ஏற்கெனவே செம்மரக் கடத்தல் தொடர்பாக 17 வழக்குகள் இருப்பதும், ஹேமந்த் குமார் மீது செம்மரக் கடத்தல் தொடர்பான மூன்று வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. மற்ற மூன்று பேர் மீதும் ஆந்திராவிலோ அல்லது வேறு ஏதாவது மாநிலங்களில் வழக்குகள் உள்ளதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in