‘கஞ்சாப்பூ’ பாடல் சர்ச்சை: மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட மணிமாறன்!

‘கஞ்சாப்பூ’ பாடல் சர்ச்சை: மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட மணிமாறன்!

சமூகப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில் உருவாக்கப்படும் திரைப்படப் பாடல்கள் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனத்தை எதிர்கொள்வது வழக்கம். அந்த வகையில், ‘விருமன்’ படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சாப்பூ கண்ணால’ பாடல் கடும் கண்டனத்தைச் சந்தித்திருக்கிறது. இதையடுத்து, தனது பொறுப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் பாடலாசிரியர் மணிமாறன்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘விருமன்’. இப்படத்தில் மணிமாறன் எழுதி யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் ‘கஞ்சாப்பூ கண்ணால’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எனினும், ‘கஞ்சாப்பூ கண்ணால’ எனும் பதம் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே போதைப்பொருட்களின் பிடியில் இளம் தலைமுறையினர் சிக்கிவிடக் கூடாது என அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், இதுபோன்ற பாடல் வரிகள் அந்த முயற்சிகளைப் பின்னடையச் செய்துவிடும் எனப் பலர் விமர்சித்தனர்.

இந்நிலையில், இந்தப் பாடல் வரிகளுக்காக மன்னிப்பு கேட்பதாகப் பாடலாசிரியர் மணிமாறன் தெரிவித்திருக்கிறார். “கஞ்சாப்பூ பாடல் வரிகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் மயக்கும் தன்மைக்காகப் பெண்களைக் கஞ்சாப்பூவுடன் ஒப்பிட்டேன். கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை. இருப்பினும் என்னுடைய வார்த்தைகள் தவறானவைதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in