அசத்திய ஆர்ஆர்ஆர்: ராஜமெளலியை ஒப்பந்தம் செய்த அமெரிக்க நிறுவனம்!

எஸ்.எஸ்.ராஜமெளலி
எஸ்.எஸ்.ராஜமெளலி

புகழ்பெற்ற தெலுங்கு சினிமா இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் சமீபத்திய படமான ‘ஆர்ஆர்ஆர்’ அவருக்கு ஏராளமான புகழ் சேர்த்திருக்கிறது. படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் குறித்தும், கிராஃபிக்ஸ் காட்சிகள் குறித்தும் ஹாலிவுட் ஜாம்பவான்கள் பலர் புகழுரைகளை சமூகவலைதளங்களில் பதிவுசெய்துவருகின்றனர். இந்நிலையில், ‘க்ரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்ஸி’ (சிஏஏ) எனும் அமெரிக்க நிறுவனம் ராஜமெளலியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.


ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் மார்ச் 24-ல் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகமெங்கும் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. நெட்ஃபிளிக்ஸில் தொடர்ந்து 10 வாரங்கள் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படம் ‘ஆர்ஆர்ஆர்’ மட்டும்தான். இப்படிப் பல்வேறு சாதனைகளை இப்படம் புரிந்திருந்தாலும், ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின் சார்பில் போட்டியிடும் படமாக இப்படம் தேர்வாகாதது ராஜமெளலி ரசிகர்களை சற்றே ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்தச் சூழலில்தான், இப்படத்தில் ராஜமெளலி காட்டிய ஜாலங்களால் வசீகரிக்கப்பட்ட க்ரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்ஸி நிறுவனம், அவருடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் க்ரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்ஸி, அமெரிக்காவின் திறமைசாலிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் திறனை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நிறுவனம் ஆகும். ராஜமெளலியுடனான ஒப்பந்தத்தின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜமெளலி தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படம் ஒன்றை இயக்கிவருகிறார். பெரும் பொருட்செலவில் தயாராகிவரும் இப்படத்தில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in