25 ஆண்டுகளைக் கடந்த ‘இளைய’ராஜா: நன்றி தெரிவித்த யுவன்!

25 ஆண்டுகளைக் கடந்த ‘இளைய’ராஜா: நன்றி தெரிவித்த யுவன்!

நடிகர் சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ (1996) படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. ஏற்கெனவே இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா ‘அலெக்ஸாண்டர்’, ‘மாணிக்கம்’ போன்ற படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியிருந்த நிலையில், அரவிந்தனில் யுவன் தொடங்கிய பயணம், இளையராஜா குடும்பத்திலிருந்து இன்னொரு இசை வாரிசு எனும் மகிழ்ச்சியை ராஜ குடும்ப ரசிகர்கள் மத்தியில் விதைத்தது. அந்தப் படத்தின் ‘ஆல் த பெஸ்ட்’ பாடலும், ‘ஈர நிலா’ பாடலும் ரசிகர்களை வசீகரித்தன.

அதன் பின்னர், பல படங்களுக்கு இசையமைத்தாலும் செல்வராகவன் கதை - வசனத்தில் கஸ்தூரி ராஜா இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்து, இளம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த இசையமைப்பாளரானார். செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தில் அவர் தந்த பாடல்களும் பின்னணி இசையும் அவரது தனித்துவ இசை அடையாளத்தை ஆழமாகப் பதியச் செய்தன. அதைத் தொடர்ந்து செல்வராகவன், விஷ்ணுவர்த்தன், வெங்கட் பிரபு,ராம் என சிறந்த இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரிந்த யுவனின் இசைப் பயணம் மிகப் பெரிய வெற்றிப் பயணமானது.

‘பிஜிஎம் கிங்’, ‘யு1’, ‘லிட்டில் மேஸ்ட்ரோ’ என்பன போன்ற அடைமொழிகளுடன் அன்பாக ரசிகர்களால் அழைக்கப்படும் யுவன் தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் இசையமைத்திருக்கிறார். தனது இசையிலும் பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பல ஹிட் பாடல்களைப் பாடிவருகிறார். மெல்லிய காதல் ஏக்கம் கலந்த குரலில் யுவன் பாடிய பாடல்கள் இன்றைய யுவன், யுவதிகள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படுகின்றன. யூடியூபில் யுவன் ப்ளே லிஸ்ட்டுகள் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றவை.

இளையராஜாவின் இசைக்குழுவில் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றிய காலத்திலிருந்தே அவருடன் நல்ல நட்பில் இருக்கும் யுவன், அவரது இசையில் பாடல்கள் பாடினார். தந்தை இளையராஜாவின் இசையிலும் பாடியிருக்கிறார். இளையராஜா - வைரமுத்து பிரிவுக்குப் பிறகு அந்த இணை மீண்டும் சேராதா என அங்கலாய்ப்புடன் காத்திருந்த தமிழ்த் திரை ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்றிவருகிறார். தந்தை இளையராஜாவுடன் இணைந்து ‘மாமனிதன்’ படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் பின்னணி இசைக்காகவே பேசப்படும் யுவன், அடுத்தடுத்து பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘வலிமை’ படத்தின் பாடல்களுக்கு யுவன் இசையமைத்திருந்தாலும், அவர் பின்னணி இசை அமைக்காமல் ஜிப்ரான் அந்தப் பணியை மேற்கொண்டிருந்தார். யுவனின் பின்னணி இசைக்காகவே திரையரங்குக்குத் திரண்டுவரும் ரசிகர்கள் பலருக்கு அதில் சற்றே வருத்தம்தான்.

சில வருடப் பிரிவுக்குப் பின்னர் செல்வராகவனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றிய யுவன், அவரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் பெரும் இசை விருந்து படைப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், 25 ஆண்டுகளைக் கடந்த தனது இசைப் பயணத்தில் துணை நிற்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் யுவன். “விருதுகள் எனக்கு ஒரு பொருட்டல்ல. ரசிகர்களின் இதயங்களை வெல்வதுதான் எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து என்னை இயங்கவைக்கிறது” என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in