நடிகர் விஜய் சொன்ன அந்த தகவல்: யுவன் சங்கர் ராஜா மகிழ்ச்சி

நடிகர் விஜய் சொன்ன அந்த தகவல்: யுவன் சங்கர் ராஜா மகிழ்ச்சி

சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, சினிமாவுக்கு வந்து 25 வருடம் ஆனதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், `இத்தனை வருடமாக இசைத்துறையில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. 25 வருடம் எப்படி இவ்வளவு வேகமாக போச்சுன்னு கூட எனக்குத் தெரியல. இவ்வளவு வருஷம் என் ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறீர்கள். என்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகளுக்கு நன்றி. என்னுடன் பணியாற்றும் இசைக் கலைஞர்கள், பாடகர்களுக்கும் நன்றி. தொடர்ந்து சிறந்த படங்கள் வருகிறது. சுயாதீன பாடல்களும் பண்ண இருக்கிறேன்’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த யுவன் சங்கர் ராஜா, யுவனிஸம் பற்றி கேட்கிறீர்கள். நடிகர் விஜய் சாரின் மேனேஜர் எனக்கு ஒரு முறை புகைப்படம் ஒன்றை அனுப்பினர். பார்த்தேன். அதில் யுவனிஸம் என்ற ஒரு டிசர்ட் அணிந்தபடி விஜய் சார் மகன் இருந்தார். இதுக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியல. பிறகு அருமைன்னு மெசேஜ் அனுப்பினேன். பிறகு விஜய் சாரை சந்தித்தபோது, ’நான் தான் அந்த புகைப்படத்தை அனுப்ப சொன்னேன். என் மகன் உங்களோட பயங்கரமான ரசிகன்’னு சொன்னார். மகிழ்ச்சியான தருணம் அது.

என் கேரியரில் இதுதான் உச்சக்கட்டம் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் இசையில் அதிகமாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

மறைந்த நா. முத்துக்குமாரின் இழப்பையும், அவர் வகித்த இடத்தையும் யாரும் இன்னும் நிரப்பவில்லை. அவர் பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். நடிக்க வருவீர்களா என்று கேட்கிறீர்கள்? இசை ஆல்பத்தில் நடிக்க மட்டும் கவனம் செலுத்துவேன். என் இசையில், லதா மங்கேஷ்கர், பாலசுப்ரமணியம் ஆகியோரை பாட வைக்காதது குறித்து வருத்தம் இருக்கிறது. இந்தி தெரியாது எனப் போடப்பட்ட டீசர் பற்றி கேட்கிறீர்கள். நிஜமாகவே எனக்கு இந்தி தெரியாது. அதனால்தான். மற்றபடி அவர்களை காயப்படுத்தும் எண்ணம் இல்லை. பெண்களை மையப்படுத்திய கதை ஒன்றை எழுதியுள்ளேன். படம் இயக்கவும் இருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிக்கிறேன்.

எல்லா இசை அமைப்பாளருக்கும் ஆன்மிக எண்ணம் தோன்றும். ஒரு டியூன் போடறோம். அது இவ்வளவு பேரை போய் சேருது. அதை நான் தான் போட்டனா? இது எப்படி வந்தது? அப்படின்னு யோசிக்கும்போது அந்தத் தேடல் ஆன்மிகத்துக்கு கொண்டு செல்லும். எனக்கு என் அம்மாவின் இழப்பில் இருந்துதான் அது தொடங்கியது என்று நினைக்கிறேன். அடுத்து நடிகர் சிம்புவுடன் சேர்ந்து சுயாதீன பாடல் வீடியோ பண்ண முடிவு செய்திருக்கிறோம்' தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in