'குருவுக்கு மரியாதை கொடுக்காமல் சூப்பர்ஸ்டாராக முடியாது': பிரபல ஹீரோவை விளாசிய இயக்குநர்!

அம்மா ராஜசேகர்
அம்மா ராஜசேகர்

குருவுக்கு மரியாதைக் கொடுக்காமல் சூப்பர்ஸ்டார் ஆக முடியாது என்று பிரபல ஹீரோவை இயக்குநர் விளாசியுள்ளார்.

பிரபல நடன இயக்குநர் அம்மா ராஜசேகர். சென்னையைச் சேர்ந்த இவர் தமிழில் பல படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது தயாரித்து, இயக்கியுள்ள படம், ’ஹை ஃபைவ்’ (Hi Five). இதன் பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது.

இதில் கலந்துகொள்ள பிரபல தெலுங்கு ஹீரோ நிதினை அழைத்திருந்தார், அம்மா ராஜசேகர். ஆனால், நிதின் வரவில்லை. இதனால் கோபமடைந்த அவர், நிதினின் செயல் தன்னைக் காயப்படுத்தி விட்டதாகக் கூறினார். இதுபற்றி மேடையில் அவர் கூறியதாவது:

பத்து நாட்களுக்கு முன்பே நடிகர் நிதினுக்கு அழைப்பு விடுத்தேன். வருகிறேன் என்றார். ஆனால், காய்ச்சல் என்று பொய் சொல்லிவிட்டு வராமல் இருந்துவிட்டார். சரி, ஒரு வீடியோ பைட் கொடுங்கள் என்று கேட்டேன். அதையும் அவர் கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் அவருக்கு நடனம் பற்றி ஏதும் தெரியாது. அதை சொல்லிக்கொடுத்தவன் நான். குரு என்ற முறையில் எனக்கு மரியாதைக் கொடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை.

நடிகர் நிதின்
நடிகர் நிதின்

வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் நமக்கு உதவியவர்களை மறக்கக் கூடாது. நிதின் உயர்ந்துவிட்டதால் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார். குருவுக்கு மரியாதை கொடுக்காமல் இருந்தால் நீங்கள் சூப்பர்ஸ்டார் ஆக முடியாது. டெக்னீஷியன்கள் விதை போன்றவர்கள். கலைஞர்கள் பழம் போன்றவர்கள். விதையில் இருந்து டெக்னீஷியன்களால் மீண்டும் ஒரு மரத்தை வளர்க்க முடியும். பழத்தை உருவாக்க முடியும். நான் உங்களை நம்பி ஏமாந்துவிட்டேன் நிதின். வாழ்க்கையில் நாம் மீண்டும் சந்திப்போம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம். இவ்வாறு அம்மா ராஜசேகர் கூறினார்.

இயக்குநர் ஒருவர் இப்படி பரபரப்பாக பேசியிருப்பது தெலுங்கு சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in