
திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள 'லக்கி மேன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் பயணத்தைப் பற்றிய படமாக இது இருக்கும். சில சமயங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும் ஒரு அற்புதமான அதிர்ஷ்டம். அதனால் இந்தப் படத்தின் நாயகனுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் அடிப்படைக் கருவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
படம் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் உள்ளவர்கள் எளிதில் சந்திக்கும், ஆனால் சொல்லாமலும், கவனிக்கப்படாமலும் இருக்கும் ஒரு சிறிய மற்றும் எளிமையான பிரச்சினையை இப்படம் பேசுகிறது. 'லக்கி மேன்' படத்தின் முழு படப்பிடிப்பும் ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகர் பாலாஜி வேணுகோபால் கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். பாலாஜி வேணுகோபால் வானொலி, தொலைக்காட்சி, சினிமா மற்றும் யூடியூப்பில் 20 வருட அனுபவமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷான் ரோல்டனின் இசையமைப்பிலும், சந்தீப் கே விஜய்யின் ஒளிப்பதிவிலும் தயாராகியுள்ள இப்படத்திற்கு கார்க்கி பாவா இணை எழுத்தாளராக உள்ளார்.