ஒய்.ஜி.மகேந்திரன் : காமெடியிலும் கேரக்டரிலும் கலக்கிய இளமைக் கலைஞன்!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
ஒய்.ஜி.மகேந்திரன் : காமெடியிலும் கேரக்டரிலும் கலக்கிய இளமைக் கலைஞன்!

குணச்சித்திர நடிகர்களும் வில்லன் நடிகர்களும் ஒருகட்டத்தில் காமெடி செய்யத் தொடங்கினார்கள். அவர்களை ஏற்றுக்கொண்டு அந்த நடிப்பையும் பாராட்டினார்கள் ரசிகர்கள். அதேபோல், காமெடியாக நடித்துக்கொண்டிருந்தவர்கள், குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியெடுத்திருக்கிறார்கள். இதையும் ரசித்துக் கொண்டாடினார்கள் ரசிகர்கள். அப்படி, நாடகம், சினிமா, தொலைக்காட்சி சீரியல்கள் என சகல இடங்களுக்குள்ளேயும் சென்று, ரசிகர்களைக் கவர்ந்த ஒருசிலரில், ஒய்.ஜி.மகேந்திரனும் ஒருவர்.

தமிழகத்தில், நாடகத்துறையின் தாக்கம் இருந்த காலகட்டம் மிக அருமையான காலம் என்பார்கள். எம்ஜிஆரும் சிவாஜியும் கூட நாடகத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவர்கள்தான். பேரறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் கூட நாடகத்தில் எழுதிவிட்டு, திரைத்துறையில் புதியதொரு பாய்ச்சலைத் தந்தவர்கள்தான். நாடகத்துறையின் ஆரம்பக் காலங்களில், ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பாணி ஒன்றை அமைத்துக் கொண்டு கதைகளிலும் வசனங்களிலும் நகைச்சுவைகளிலும் கோலோச்சினார்கள்.

ஒய்.ஜி.பார்த்தசாரதி, யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ் எனும் குழுவை உருவாக்கினார். இவரின் நாடகங்கள் மேடையேறுவது தெரிந்தாலே, எங்கிருந்தெல்லாமோ சென்னைக்கு வந்து நாடகம் பார்த்ததெல்லாம் நடந்திருக்கின்றன. நடிகை ஜெயலலிதா கூட இவரின் நாடகத்தில் நடித்திருக்கிறார்.

ஒய்.ஜி.பார்த்தசாரதி, சகஸ்ரநாமம், ஆர்.எஸ்.மனோகர், கே.பாலசந்தர், சோ, மெளலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் நாடக உலகை வார்த்து வளர்த்தெடுத்த காலம் அது. பார்த்தசாரதியின் மைந்தன் மகேந்திரன், எம்.பி.ஏ., வரைக்கும் படித்தார். அதேசமயம், கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அப்பாவின் நாடகங்களிலும் நடித்தார். இவரின் நடிப்பு புதுபாணியாக இருந்தது. ஒரு நாடகத்தில் வயிறு வலிக்கச் சிரிக்கச் செய்வார். இன்னொரு நாடகத்தில், கண்களில் நீர் கசியச் செய்துவிடுவார். இப்படியும் நடிப்பார், அப்படியும் நடிப்பார் என்று பேரெடுத்த மகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டார்.

இவர் நடித்த நாடகத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் சிகரம் பாலசந்தர், தான் இயக்கிய ’நவக்கிரகம்’ படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனை அறிமுகப்படுத்தினார். அப்படித்தான் திரைத்துறைக்குள் வந்தார் ஒய்ஜி. மீண்டும் ‘நூற்றுக்கு நூறு’ படத்தில் வாய்ப்பு வழங்கினார் பாலசந்தர். அதன் பின்னர், வரிசையாக படங்கள் வந்தன. கொஞ்சம் அசட்டுத்தனமாகவும் அப்பாவித்தனமாகவுமான கதாபாத்திரங்களில், நடிகர் சோ கலக்கியெடுத்தார். இந்த பாணி மகேந்திரனுக்கு வெகு இயல்பாகவே வந்தது.

ஒய்.ஜி.மகேந்திரனின் மற்றொரு ஸ்பெஷல்... அவரின் டயலாக் டெலிவரி. அவர் பேசுகிற விதம் வேறு மாதிரி இருக்கும். அதேசமயம் அவரின் முகபாவனைகள் வேறுவிதம் காட்டும். இந்த இரண்டையும் பார்த்துக் கொண்டிருக்கிற ரசிகர்கள் வெடித்துச் சிரித்தார்கள்.

என்னதான் அப்பாவின் நாடகங்களும் அப்பாவும் இன்ஸ்பிரேஷன் என்றாலும் ஒய்.ஜி.மகேந்திரன் தீவிரமான சிவாஜி ரசிகர். முதன்முதலாக அவருடன் ‘கெளரவம்’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை இன்றைக்கும் வியந்து சொல்லி மகிழ்கிறார் மகேந்திரன்.

எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஜெய்சங்கருக்கும் ஜெமினி கணேசனுக்கும் நாகேஷ் கிடைத்தது போல், கமலுக்கும் ரஜினிக்கும் நண்பன் கதாபாத்திரமென்றால் ‘கூப்பிடு மகேந்திரனை’ என்று உடனே அழைத்துக் கொண்டார்கள். ’சகலகலா வல்லவன்’ மாதிரியான கிராமத்துப் படத்திலும் காமெடி பண்ணுவார். ‘ராஜபார்வை’ மாதிரி படத்திலும் காமெடியும் குணச்சித்திரமும் கலந்து கலக்குவார். ஏவி.எம். படங்கள், கே.பாலாஜியின் படங்கள் என தொடர்ந்து ஒய்.ஜி. மகேந்திரனைப் பயன்படுத்திக் கொண்ட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நடிகர்களும் என பெரிய பட்டியலே போடலாம்.

இன்றைக்கும் தமிழிலும் தெலுங்கிலும் கலக்கிக் கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு முதல் ஹீரோ எனும் பெருமை ஒய்.ஜி.மகேந்திரனுக்கு உண்டு. ’வெள்ளை மனசு’ என்ற படத்தில் மகேந்திரனே நாயகன். அதேபோல், சிவாஜி, கமல், ரஜினி முதலானோர் கெளரவத் தோற்றத்தில் நடித்த ‘உருவங்கள் மாறலாம்’ படத்தில் கதையின் நாயகனாக நடிப்பில் உருக்கியிருப்பார். ‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் ‘ஜங்குஜக்கா’ என்று சொல்லுவதும் ‘குரு’ படத்தில் ஜெயமாலினிக்குப் பின்னே ஜொள்ளுவிட்டுக்கொண்டு செல்வதும் என மகேந்திர ஜாலங்கள் ஏராளம்.

1975-ம் ஆண்டு, ஜெமினி கணேசன், செளகார் ஜானகியைக் கொண்டு, ‘உறவுக்கு கைகொடுப்போம்’ என்ற படத்தை இயக்கினார் ஒய்.ஜி.மகேந்திரன். நடிகரும் இயக்குநருமான விசுவின் நாடகம் இது.

ஒய்.ஜி.மகேந்திரனின் மற்றுமொரு ஸ்பெஷல்... எண்பதுகளில் பெரும்பாலான படங்களில் நடித்து வந்தபோதும், அப்பா ஆரம்பித்த நாடகக் குழுவில் இருந்துகொண்டு, நாடகங்களிலும் நடித்துவந்தார். இன்றைக்கும் இவரின் நாடகங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு.

நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் என்று இயங்கிக் கொண்டே இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவியும் சகோதரிகள். ஆனால், சூப்பர் ஸ்டாருக்கு உறவு என்றோ உலகநாயகனின் நட்புக்கு உரியவர் என்றோ ஜெயலலிதாவே அழைத்து அடிக்கடிப் பேசுகிற அளவுக்கு பழக்கமும் அன்பும் கொண்டவர் என்கிற பந்தாவோ இல்லாமல், நிறைகுட வாழ்வுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

அன்றைக்கு பாலசந்தர், முக்தா சீனிவாசன், எஸ்.பி.முத்துராமன், கே.விஜயன் என ஏகப்பட்ட பேரின் இயக்கத்தில் நடித்தவர், ‘பரிட்சைக்கு நேரமாச்சு’ படத்தில் சிவாஜிக்கு இணையான மகன் கதாபாத்திரத்தில் நெகிழச் செய்த பெருமையெல்லாம் கொண்டவர் என்றாலும் மிஷ்கின், வெங்கட்பிரபு என இந்தக் காலத்து இயக்குநர்களும் மகேந்திரனை அழைத்து, அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களைக் கொடுத்து வருவதுதான், மகேந்திரனின் ஸ்பெஷல்!

‘யுத்தம் செய்’ படத்தில் வில்லன்களை கொன்றுபோடும் தகப்பனாக மிரட்டியிருப்பார். ‘மாநாடு’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் சேர்ந்துகொண்டு மகேந்திரன் கொடுத்த அலப்பறைக்கு கரவொலி கிடைத்துக் கொண்டே இருந்தது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெயரில் யாரேனும் ஏதேனும் விழா நடத்தினால், பிள்ளையார் சுழி போல, ஒய்.ஜி.மகேந்திரனை அழைத்துவிடுவார்கள். அவரும் அந்த மேடையில் சிவாஜியைப் பற்றி நூறு விஷயங்கள் சொல்லுவார். இந்த மேடையில் இருநூறு விஷயங்களைக் கொட்டுவார்.

1950-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி பிறந்த ஒய்.ஜி. மகேந்திரன் எனும் இளமை மாறாத கலைஞனுக்கு 72 வயது என்று சொன்னால், எவருமே நம்பமாட்டார்கள்.

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் மகேந்திரன் சார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in