திரை விமர்சனம்: யசோதா

திரை விமர்சனம்: யசோதா

வாடகைத்தாயாக இருக்கச் சம்மதிக்கும் பெண்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஊழல் மாஃபியாவை எதிர்த்துப் போராடும் பெண்ணின் கதைதான் ‘யசோதா’.

தங்கையின் மருத்துவச் செலவுக்காக ஒரு பணக்கார குடும்பத்துக்கான வாரிசைப் பெற்றுத்தர, வாடகைத்தாயாக இருக்கச் சம்மதிக்கிறாள் யசோதா (சமந்தா). கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காக  ‘ஈவா’ என்னும் வாடகைத்தாய் பராமரிப்பு மையத்தில் தங்க வைக்கப்படுகிறாள். மதுபாலா (வரலட்சுமி சரத்குமார்) என்பவரால் நடத்தப்படும் அந்த அதிநவீன மையத்தில் வேளாவேளைக்கு உணவு, மருத்துவம், யோகா பயிற்சி என பாதுகாப்பான பிரசவத்துக்குத் தேவையான அனைத்தும் செய்து தரப்படுகின்றன.

அங்கு தன்னைப் போல் பணத்துக்காக வாடகைத்தாய் முறைக்குச் சம்மதித்த பிற கர்ப்பிணிகளின் நட்பைப் பெறும் யசோதா, தன்னைப் பரிசோதிக்கும் மருத்துவர் கெளதம் ( உன்னி முகுந்தன்)  மீது மையல் கொள்கிறாள். திடீரென்று அந்த மையத்தில் அடுத்தடுத்து இரண்டு கர்ப்பிணிகள் பிரசவ வலி எடுத்த பிறகு காணாமல் போகிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்று தேடும் முயற்சியில் இறங்கும் யசோதா பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்கிறாள்.

இதற்கிடையே ஒரு தொழிலதிபரும் அழகிப் போட்டிகளில் பங்கேற்கும் மாடலும் கார் விபத்தில் இறக்கிறார்கள். விசாரணையில் அது விபத்தல்ல, கொலை என்று தெரியவர காவல் துறைக் குழு ஒன்று விசாரணையைத் தீவிரப்படுத்துகிறது. ஃபேஷன் க்ரீம் நிறுவனத்துக்கும் அதன் உரிமையாளரின் தந்தையான மத்திய அமைச்சருக்கும் (ராவ் ரமேஷ்)  இந்தக் கொலைகளில் தொடர்பு இருப்பது தெரியவருகிறது. கூடவே இந்த விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகிறார்கள்.  

வாடகைத்தாய் பராமரிப்பு மையத்துக்கும் ஃபேஷன் க்ரீம் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? கொல்லப்பட்டவர்கள் யார்?  இவற்றுக்குப் பின்னால் உள்ள உண்மைகளை யசோதா கண்டறிந்தாளா? இறுதியில் அவளுக்கு என்ன ஆனது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கிறது திரைக்கதை.

ஹரி - ஹரிஷ் என இருவர் இணைந்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை ராஜேஷ்குமார் கிரைம் நாவல்களைப் போல் இரண்டு வெவ்வேறு தடங்களில் பயணித்து இறுதியில் ஒன்றிணைகிறது. படத்தின் முதல் பாதியில்  காவல் துறை விசாரணை தொடர்பான தடம் சுவாரசியத்துடன் நகர்கிறது. யசோதாவின் பின்னணி, வாடகைத்தாய் மையம் தொடர்பான காட்சிகளில் சென்டிமென்ட், நகைச்சுவைக்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றன. இவை இரண்டிலும் சிறப்பாகச் சொல்ல எதுவும் இல்லை என்றாலும் மோசம் என்றும் சொல்லிவிட முடியாது. முதல் பாதியின் பிற்பகுதியில் இரண்டு தடங்களிலும் மர்மங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவிழத் தொடங்கும்போது சுவாரசியம் கொஞ்சம் அதிகரிக்கிறது. ஆனால் கர்ப்பிணியான யசோதா, மாஸ் கதாநாயகர்களைப் போல் சண்டை போடுவது கடுமையான தாக்குதல்களுக்குப் பிறகும் உடனடியாக எழுந்து எதிர்தாக்குதல் நிகழ்த்துவது உள்ளிட்ட தர்க்கப் பிழைகள் மலிந்து கிடைக்கின்றன.

இரண்டாம் பாதியில் கணிசமான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளின் பின்கதை நம்ப முடியாத விஷயங்களால் நிரம்பியிருக்கிறது. ஆனால் அவ்வப்போது நிகழும் ட்விஸ்ட்கள் ஆச்சரியம் அளிப்பதால் இந்தப் பிரச்சினையை கொஞ்சம் பொறுத்துக்கொள்ள முடிகிறது. குற்றவாளிகள் யார் என்று தெரிந்துவிடும் இடத்திலேயே படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றாலும் அதற்குப் பிறகும் திரைக்கதை நீண்டுகொண்டே போவது  பொறுமையைச் சோதிக்கிறது. சமந்தா, வரலட்சுமி, சம்பத் போன்ற தெரிந்த நடிகர்கள் இருப்பதால்  இந்தப் படத்தைத் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படம் என்னும் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அனைத்து வகையிலும் தமிழில் டப் செய்யப்பட்ட தெலுங்குப் படம் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது.

வாடகைத்தாய் முறையைத் தவறாகப் பயன்படுத்தும் ஊழலை வெளிச்சமிட்டுக் காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் படத்தின் இறுதியில் குழந்தை பெற்றுக்கொள்வதே பெண்ணுக்கான இலக்கணம் என்பது போல் தாய்மையை அளவுக்கதிகமாகப் புனிதப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம்.

சமந்தா சென்டிமென்ட் காட்சிகளில் அளவாகவும் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியாகவும் நடித்து படத்துக்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறார். வரலட்சுமியும் தன் பங்கைச் சரியாகத் தந்திருக்கிறார். காவல் துறை விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்கும் சம்பத் வழக்கம்போல் கவனம் ஈர்க்கிறார். மணி ஷர்மாவின்  பின்னணி இசை நன்று. பாடல்கள் சுமார் ரகம். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது

மொத்தத்தில் அளவுக்கதிகமான லாஜிக் பிழைகள், நம்ப முடியாத கதாபாத்திர சித்தரிப்புகள் எனச் சோதித்தாலும் பெருமளவில் விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை சமந்தாவின் நடிப்பு ஆகியவற்றால் தப்பித்துவிடுகிறாள்  ‘யசோதா’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in