அன்னைபூமியின் அழகை அள்ளித்தந்த ‘யார்’ கண்ணன்!

பிறந்தநாளில் சிறப்புப் பகிர்வு
’யார்’ கண்ணன்
’யார்’ கண்ணன்

கவிதை எழுதத் தொடங்கி, அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள் சிலர். அந்தச் சிலரில், இயக்குநரும் நடிகருமான ‘யார்’ கண்ணனும் ஒருவர். பட்டுக்கோட்டை பக்கத்தில் ஒரு சின்னஞ்சிறிய கிராமம்தான் சொந்த ஊர். மதுக்கூர் என்பதுதான் ஊர்ப்பெயர். அங்கிருந்து ஒரு கட்டத்தில் சினிமா ஆசையும் எழுதுகிற வெறியும் உந்தித் தள்ள... அவர் சென்று சேர்ந்தது... இயக்குநர் மகேந்திரனிடம்! அவரின் உதவியாளர், சிஷ்யர் எனும் பெருமையைப் பெற்ற கண்ணன், பின்னாளில், ‘யார்’ படம் மூலமாக ‘யார்’ கண்ணன் என்றானார். முன்னதாக, ஆரம்ப நாட்களில், மதுக்கூர் கண்ணன் எனும் பெயரில் பல பத்திரிகைகளில் அவரது படைப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன.

’’மகேந்திரன் சாருக்கு ‘முள்ளும் மலரும்’ படம்தான் முதல் படம். அந்தப் படத்தின் பாதியிலேயே அவருடன் சேர்ந்துவிட்டேன். அந்தப் படத்தை முடிப்பதற்குள் மகேந்திரன் சார் பட்டபாடு, சந்தித்த வலிகள், புறந்தள்ளிய தயாரிப்பாளர், படம் வெளியாகி ஒருவாரம் கூட்டமே இல்லாத சூழல், அதற்குப் பிறகு கொண்டாடிய ரசிகர்கள், அதைப் பார்த்துவிட்டு, மரியாதை தந்த தயாரிப்பாளர் என்று எதையுமே மறக்க முடியாது. இதற்குப் பிறகு அடுத்த படத்துக்காக, ஏகப்பட்ட பேர் காசோலைகளுடன் வந்து காத்திருந்தார்கள். ஆனால் பணத்தையெல்லாம் பொருட்படுத்தாத மகேந்திரன் சார், அவருக்கு உதவி செய்தவருக்கு நன்றி செலுத்தும் விதமாக படம் இயக்கிக் கொடுத்தார்.

ஆமாம்... சின்னப்பா தேவர் மீது பெரிய மரியாதை வைத்திருந்தார் மகேந்திரன் சார். அவர் மறைந்தபோது இவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ‘வாங்க போகலாம்’ என்று பாலகிருஷ்ணன் என்பவர் அவருடைய காரை எடுத்துக் கொண்டு எங்களை அழைத்துச் சென்றார். தேவர் ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தினோம். அந்த நன்றியை மறக்காமல் பாலகிருஷ்ணனை தயாரிப்பாளராக்கினார் மகேந்திரன் சார். அதுதான் ‘உதிரிப்பூக்கள்’. என் குருவிடம் இருந்து திரைக்கு அப்பாலும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்’’ என்று ஒருமுறை அவரைச் சந்தித்து பேசுகிற தருணத்தில் மனம் விட்டுப் பேசினார் யார் கண்ணன்.

யார் கண்ணனுக்குக் கையெழுத்து மிக நன்றாக இருக்கும். இதை கவனித்துவிட்ட மகேந்திரன் சார், ‘வசனங்களை நடிகர்களுக்கு கொடுக்க’ அவர் கையெழுத்தைப் பயன்படுத்தினார். மேலும் படத்துக்கு டைட்டில் முடிவு செய்வதற்கு, ‘’கண்ணா, இந்த டைட்டிலையெல்லாம் எழுதிக்காட்டு பாக்கலாம்’’ என்று சொல்வார். ஒரு டிசைனுடன் அவர் எழுதியதைப் பார்த்துவிட்டுத்தான், பிறகு டிசைனருக்கு அதைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் மகேந்திரன். ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கு முன்னதாக ஏகப்பட்ட பேரைச் சொல்லி, எழுதச் சொல்லியிருக்கிறார் மகேந்திரன். கண்ணனும் எழுதியிருக்கிறார். இருவரும் இளையராஜாவைப் பார்க்கச் சென்றார்கள். படத்துக்கு பெயர் என்ன வைப்பது என்று தெரியவில்லை. இதோ... என்று எழுதியதையெல்லாம் கண்ணனிடம் இருந்து மகேந்திரன் வாங்கி இளையராஜாவிடம் தந்தார். பார்த்துவிட்டு பேப்பரைக் கொடுத்த இளையராஜா, ‘’நீங்க சொல்றது சரிதான். இதுல எதுவுமே சரியா இல்ல. இது சரியா வருமானு பாருங்க’’ என்று இளையராஜா சொன்ன டைட்டில்தான்... ‘உதிரிப்பூக்கள்’ ‘’ என்று ராஜாவுக்கும் மகேந்திரனுக்குமான பந்தத்தைச் சொல்லும் கண்ணன், அந்த அனுபவங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது என்றும் சொல்லிச் சிலிர்க்கிறார்.

வரிசையாகப் படங்களில் உதவியாளராக மகேந்திரனுடன் பயணித்தவருக்கு, ஒருகட்டத்தில் இயக்குவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அமானுஷ்யமான கருவைக் கதைக்களமாக எடுத்துக் கொண்டு, வித்தியாசமான முறையில் இயக்கினார். தாணு தயாரிப்பில், அர்ஜுன், நளினி முதலானோர் நடித்த இந்தப் படம் மிகப்பெரிய பாராட்டுகளை வாங்கிக் கொடுத்தது. அர்ஜுனின் ஆரம்பகாலப் படங்களில் குறிப்பிடத்தக்க படமாகவும் பேசப்பட்டது.

முன்னதாக, ’வடிவங்கள்’ எனும் படத்தை இயக்கினார். சிறந்த கதை என்று பாராட்டுகள் கிடைத்தாலும் ரசிகர்கள் அதை கவனிக்கத் தவறினார்கள். மோகன் நடித்த ‘உன்னை ஒன்று கேட்பேன்’ படத்தை இயக்கினார். ரகுமானையும் அமலாவையும் நாயகன் நாயகியாக்கி, ‘கண்ணே கனியமுதே’ என்ற படத்தைக் கொடுத்தார். இந்தப் படத்துக்கும் பாராட்டுகள் குவிந்தன. கமர்ஷியல் வட்டத்துக்குள் சிக்காமல், நல்ல கதைகளைத் தேர்வு செய்து இயக்குவதை தன் பாணியாகக் கொண்டிருந்தார். ‘’இது என் குருநாதர் மகேந்திரன் சாருடைய பாணி’’ என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார் யார் கண்ணன்.

ராமராஜனின் ஆரம்பக் காலங்களில், ‘நம்ம ஊரு நாயகன்’ என்ற படத்தை யார் கண்ணன் இயக்கினார். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல, ’அன்புக்கட்டளை’ என்கிற படத்தை ராமராஜனை வைத்து வழங்கினார். வழக்கமான ராமராஜனாக இல்லாமல், வேறுவிதமாகக் காட்டியிருந்தார்.

இதையடுத்து ஒரு இடைவெளிக்குப் பிறகு, ‘மகுடிக்காரன்’ படத்தையும் பின்னொரு இடைவெளிக்குப் பிறகு, ‘யுகா’ என்ற படத்தையும் இயக்கினார். ’பெளர்ணமி நாகம்’ எனும் அமானுஷ்யக் கதையை அட்டகாசமாகத்தான் கொடுத்தார். ஆனாலும் பெரிய அளவில் பயன் தரவில்லை.

இந்த நிலையில்தான், யார் கண்ணனுக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தன. ’பழனி’ படத்தில் நடித்தார். ‘கும்கி’ படத்தில் நல்ல கேரக்டர் கிடைத்தது. தொடர்ந்து பிரபு சாலமன் ‘கயல்’ படத்திலும் நடிக்கவைத்தார். ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஈஸ்வரன்’ என்று பல படங்களில் நடித்தார். இன்றைக்கும் நடித்து வருகிறார்.

அதேபோல, டிவி சீரியல்களிலும் தொடர்ந்து பல வருடங்களாக நடித்து வருகிறார்.

‘’2006-ம் ஆண்டு முதல் நடித்து வருகிறேன். பல படங்களை இயக்கியிருக்கிறேன். என் எழுத்தைக் காதலித்து, என்னை அப்படியே ஒரு குழந்தையைப் போல் தூக்கிக் கொண்டவர் குருநாதர் மகேந்திரன் சார்தான். அவர்தான் ‘மெட்டி’ படத்தில் ‘மெட்டி மெட்டி’ எனும் பாடலை எழுத வைத்தார். ‘நண்டு’ படத்தில் ஒரு பாடலை எழுதவைத்தார். நான் இயக்கியதும் இப்போது நடித்துவருவதும் சந்தோஷம்தான். ஆனால் மகேந்திரன் சாருடன் பணியாற்றிய காலம் என் வாழ்வில் பொற்காலம்’’ என்று பகிர்ந்துகொள்கிறார் யார் கண்ணன்.

‘’நான் பல படங்களை இயக்கினாலும் பல படங்களில் நடித்தாலும் எங்கும் கிடைக்காத புகழும் நற்பெயரும் என் குருநாதர் மகேந்திரன் சாரின் ‘நண்டு’ படத்துக்குப் பாட்டு எழுதியதில்தான் கிடைத்தது. இப்போதும் யார் பார்த்தாலும் அந்தப் பாடல் பற்றித்தான் என்னிடம் முதலில் கேட்பார்கள். பாராட்டுவார்கள்’’ என்று சொல்லி மகிழ்கிறார் யார் கண்ணன்.

’யார்’ கண்ணன்
’யார்’ கண்ணன்

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா / சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா / ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்/ இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்’ என்று எழுதியிருப்பார்.

’சேவை செய்த காற்றே பேசாயோ/ சேமங்கள் லாபங்கள் யாதோ / பள்ளி சென்ற கால பாதைகளே / பாலங்கள் மாடங்கள் ஆகா / புரண்டு ஓடும் நதிமகள் / இரண்டு கரையும் கவிதைகள் / தனித்த காலம் வளர்த்த இடங்களே / இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்’ என நெக்குருக வைத்திருப்பார்.

’காவல் செய்த கோட்டை காணாயோ/ கண்களின் சீதனம்தானோ / கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே / காரணம் மாதெனும் தேனோ / விரியும் பூக்கள் வானங்கள் / விசிறியாகும் நாணல்கள் / மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே / பழைய சோகம் இனியும் இல்லை' என்று மலேசியா வாசுதேவன் குரலும் இளையராஜாவின் இசையும் சேர்ந்து, கூடவே இவரின் வரிகளில் நம்மை அமைதிப்படுத்தவும் செய்யும். மனம் கனக்கவும் வைத்துவிடும்!

யார் கண்ணனின் மறுபக்கமாக அவரின் இலக்கிய ஆர்வத்தையும் சொல்ல வேண்டும். ஒருபக்கம் இலக்கியக் கூட்டங்கள், புத்தக வெளியீடுகள் என்று இயங்குகிறார். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இன்னொரு பக்கம் சித்தர்கள், வழிபாடுகள் எனும் தேடலுடனும் இருக்கிறார். அவருக்கு இன்று (அக்டோபர் 20) பிறந்தநாள்!

‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா, சொல்லித்தந்த வானம் தந்தையல்லவா’ என்று இந்த பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் குறிப்பிட்டு சிலாகித்த யார் கண்ணனை வாழ்த்துவோம்!

வாழ்த்துகள் கண்ணன் சார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in