நடிகர் விதார்த் நடித்திருக்கும் 'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் தலைப்பு எழுத்தாளர் பாலகுமாரன் மகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சுராஜ் வெஞ்சரமூடு, சவுபின் ஷாஹிர், சுரபி லட்சுமி, வின்சி, பாபுராஜ் உட்பட பலர் நடித்த மலையாளப் படம், ’விக்ருஷி’. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை எம்சி ஜோசப் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக், ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.
எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார்.
இந்தப் படம் ஆஹா தளத்தில் வரும் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அலசும் இப்படத்தின் திரைக்கதை, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் தலைப்புக்கு எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ’பாலகுமாரன் எழுதிய ‘பயணிகள் கவனிக்கவும்’ மிகவும் பிரபலமான ஒரு படைப்பு. அப்பா எழுதிய அனைத்து படைப்புகளின் காப்பிரைட்ஸ் , சட்டப்படி என் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளேன். இந்நிலையில் இந்த டைட்டிலை எங்கள் படத்திற்கு வைத்துக்கொள்ளலாமா என்று என்னிடமோ எங்கள் குடும்பத்தாரிடமோ யாரும் கேட்கவில்லை. ஒரு சம்பிரதாய அழைப்பு? ஒரு கடிதம்? ஒரு விண்ணப்பம் கூட இல்லை’ என்று ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.