பாலியல் வழக்கு: நடிகரின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நடிகை வழக்கு!

பாலியல் வழக்கு: நடிகரின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நடிகை வழக்கு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல நடிகருக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது இளம் நடிகை ஒருவர், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கொச்சி போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். இதையடுத்து ஃபேஸ்புக் லைவில் தோன்றிய விஜய் பாபு, நடிகையின் பெயரை அதில் வெளிப்படுத்தினார். இது பரபரப்பானது. இதனால், விஜய் பாபு மீது மற்றொரு வழக்கை போலீஸார் பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விஜய் பாபு வெளிநாட்டுக்குத் தப்பியோடினார். அதனால் போலீஸார் அவரது பாஸ்போர்ட்டை முடக்கினர்.

இதற்கிடையே, விஜய் பாபு தனக்கு முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மே 31-ம் தேதி நிபந்தனைகளுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

பின்னர் கொச்சி திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ நான் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. நடிகையின் சம்மதத்துடனேயே அது நடந்தது. அடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்காததால் நடிகை இவ்வாறு புகார் கூறியுள்ளார். நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்" என்றார்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், புகாரை வாபஸ் வாங்குவதற்கு நடிகர் தரப்பில் இருந்து ரூ.1 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட நடிகை புகார் தெரிவித்திருந்தார். அதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஜூன் 27-ம் தேதி விஜய் பாபுவை பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், விஜய் பாபுவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் வெளிநாடு தப்பியோடிய விஜய் பாபு முன் ஜாமீன் கிடைத்த பிறகே இந்தியா திரும்பியுள்ளார். இதன் மூலம் சட்டத்தின் ஆட்சிக்கு அவர் சவால் விட்டுள்ளார் என்றும் முன் ஜாமீனை தொடர அனுமதித்தால் அவர், சாட்சியங்களை அழித்து சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in