யார் உயிரையும் எடுக்க, யாருக்கும் உரிமை கிடையாது: சர்ச்சைகளுக்கு சாய் பல்லவி விளக்கம்!

யார் உயிரையும் எடுக்க, யாருக்கும் உரிமை கிடையாது: சர்ச்சைகளுக்கு சாய் பல்லவி விளக்கம்!

தனது பேட்டி சர்ச்சையானது குறித்து நடிகை சாய் பல்லவி அளித்துள்ள விளக்கம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை சாய் பல்லவி நடித்த 'விராட பர்வம்' என்ற தெலுங்கு படம் வெள்ளிக்கிழமை வெளியானது. படம் பற்றிய அவர் அளித்த பேட்டி ஒன்றில், " ' தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில், பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டி இருக்கிறார்கள். இதை மத மோதலாக எடுத்துக்கொண்டால், சமீபத்தில் பசுவை ஏற்றிச் சென்ற இஸ்லாமியரைத் தாக்கி, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடச் சொன்னதை என்னவென்று சொல்வீர்கள்? அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பரபரப்பானது. அத்துடன் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியது.

இது தொடர்பாக இப்போது விளக்கம் அளித்துள்ளார் சாய் பல்லவி. அவர் கூறியிருப்பதாவது:

என் வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதால், ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன் இரண்டு முறை யோசிப்பேன். நான் சமீபத்தில் அளித்த பேட்டியில், நீங்கள் வலதுசாரியா, இடதுசாரியா என்று கேட்கப்பட்டது. நான் நடுநிலையாளர் என்று சொன்னேன். அப்படித்தான் வளர்க்கப்பட்டேன். முதலில் மனிதநேயமுள்ளவர்களாக இருக்க வேண்டும். பிறகுதான் அடையாளங்கள் என்றேன். ஒடுக்கப்பட்டவர்கள் முதலில் பாதுகாக்கப் படவேண்டும் என்றும் தெரிவித்தேன். அதில், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் கும்பல் கொலை பற்றி குறிப்பிட்டு பேசினேன்.

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைப் பார்த்ததும் பாதிக்கப்பட்டேன். இனப்படுகொலை போன்ற ஒரு சோகத்தை எப்போதும் நான் குறைத்து மதிப்பட மாட்டேன். 3 மாதங்களுக்கு முன்பு அந்தப் படத்தின் இயக்குநரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது, அவரிடம், படம் என்னைப் பாதித்தது குறித்து தெரிவித்தேன். அதேபோல் கரோனா ஊரடங்கின்போது கும்பல் படுகொலை வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் எந்த வன்முறையும் தவறுதான்.

சமூக வலைதளங்களில், கும்பல் வன்முறை குறித்து நியாயம் கற்பித்து வருகிறார்கள். யாருடைய உயிரையும் எடுக்க, யாருக்கும் உரிமை கிடையாது. மருத்துவம் பயின்றவர் என்ற முறையில் அனைத்து உயிரும் சமம், முக்கியம் என்று நம்புகிறேன். என் 14 வருட பள்ளி காலத்தில், அனைத்து குடிமக்களும் எனது அண்ணன், தங்கைகள், நான் என் தாய்நாட்டை நேசிக்கிறேன். இந்தியராக பெருமை கொள்கிறேன் என்று ஏற்ற உறுதிமொழி ஆழமாகப் பதிந்திருக்கிறது.

ஆனால், என் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. சில பிரபலங்களும் என் பேட்டியை முழுமையாக பார்க்காமல் கருத்து கூறியது வேதனையளிக்கிறது. எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி. இவ்வாறு சாய் பல்லவி கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in