வில் ஸ்மித் படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு: இதுதான் காரணமா?

வில் ஸ்மித் படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு: இதுதான் காரணமா?

வில் ஸ்மித் நடித்துள்ள ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். இவர் ’கிங் ரிச்சர்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். அந்த விழாவுக்கு மனைவி ஜடா பிங்கெட்டுடன் அவர் வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக், ஜடாவை கிண்டல் செய்து பேசினார். ஆவேசமடைந்த வில் ஸ்மித், மேடைக்குச் சென்று, கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். இது பரபரப்பானது.

ஆஸ்கர் விழாவில் கிறிஸ் ராக்கை அறையும் வில் ஸ்மித்
ஆஸ்கர் விழாவில் கிறிஸ் ராக்கை அறையும் வில் ஸ்மித்

பின்னர் இந்தக் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டார், ஸ்மித். ஆஸ்கர் நிர்வாகம் அந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவம் காரணமாக, வில் ஸ்மித் நடித்துள்ள ’எமன்ஸிபேஷன்’ (Emancipation) என்ற படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அந்தோணி புகுவா (Antoine Fuqua) இயக்கியுள்ள இந்தப் படத்தில் வில் ஸ்மித்துடன் பென் ஃபாஸ்டர், சார்மைன் பிங்வா, முஸ்தாபா ஜாகிர், ஸ்டீவ்ஃபன் ஓக் உட்பட பலர் நடித்துள்ளனர். 1863-ம் ஆண்டு அமெரிக்காவின் லூசியானாவில் இருந்து, கார்டன் (Gordon) என்ற அடிமை, சாட்டையடியில் இருந்து தப்பியோடி உயிர்பிழைத்தக் கொடுமையான கதையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

கார்டனின் முதுகில் இருந்த சாட்டையடி தழும்புகளைக் கொண்ட புகைப்படங்கள், உலகம் முழுவதும் வெளியாகி அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தின. அமெரிக்க அடிமைத்தன ஒழிப்புக்கு ஆதாரமாக இந்தப் புகைப்படம் இருந்தது.

இந்த உண்மைக் கதையை மையப்படுத்தி எமன்ஸிபேஷன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தப்பியோடும் அடிமையாக, வில் ஸ்மித் நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள ஆப்பிள் நிறுவனம், ரிலீஸை அடுத்த வருடத்துக்குத் தள்ளி வைத்துள்ளது. அதிகாரபூர்வாக தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும் 2023-ம் ஆண்டுதான் இந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in