ஆஸ்கர் அமைப்பிலிருந்து வில் ஸ்மித் திடீர் விலகல்

ஆஸ்கர் அமைப்பிலிருந்து வில் ஸ்மித் திடீர் விலகல்

ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து, நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட்-டின் மொட்டை தலை குறித்து கிண்டலாகப் பேசினார். ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற ஒருவகை முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டதால் மொட்டை அடித்துள்ளார்.

மனைவி பற்றி கிண்டலாக, கிறிஸ் ராக் பேசியதை தாங்கிக் கொள்ளாத வில் ஸ்மித், மேடைக்குச் சென்று அவர் கன்னத்தில் அறைந்தார். பின்னர் இந்தச் சம்பவத்திற்காக வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார்.

கிறிஸ் ராக் கன்னத்தில் அறையும் வில் ஸ்மித்
கிறிஸ் ராக் கன்னத்தில் அறையும் வில் ஸ்மித்

இந்நிலையில் ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து அவர் பதவி விலகியுள்ளார். இதுபற்றி ஸ்மித் வெளியிட்டுள்ள அறிக்கையில், `அகாடமி விருது விழாவில் நான் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் மன்னிக்க முடியாதவையாகவும் இருந்தன. அகாடமியின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்துவிட்டேன். நான் நடந்துகொண்ட விதத்திற்கான விளைவுகளை ஏற்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

வில் ஸ்மித்தின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக திரைப்பட அகாடமியின் தலைவர் டேவின் ருபின் தெரிவித்துள்ளார். வரும் 18-ம் தேதி அகாடமியின் வாரியக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றும் அவர் கூறியுள் ளார்.

வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in