வில் ஸ்மித் செயல்: என்ன சொல்கிறார்கள் சமந்தா, குஷ்பு, வெங்கட் பிரபு?

வில் ஸ்மித் செயல்: என்ன சொல்கிறார்கள் சமந்தா, குஷ்பு, வெங்கட் பிரபு?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று நடைபெற்ற 94-வது ஆஸ்கர் விருது விழா தனது உற்சாகமான நினைவுகளோடு யாரும் எதிர்பாராத சர்ச்சைகளோடும் முடிந்திருக்கிறது.

'கிங் ரிச்சார்ட்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித், மேடையில் திடீரென கிறிஸ் ராக்கை அறைந்ததை யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். தன் மனைவி ஜடாவின் உடல்நிலை குறித்து நகைச்சுவை என்ற பெயரில் கிறிஸ், ஆஸ்கர் மேடையில் கேலி செய்ததுதான் வில் ஸ்மித்தின் கோபத்திற்கு காரணம். பொது வெளியில் தான் அவ்வாறு அறைந்தது தவறு என்று வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். வில் ஸ்மித்தின் இந்த செயலுக்கு ஆதரவு எதிர்ப்பு என பல தரப்பு ரசிகர்களும் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில், "கிறிஸ் ராக் மற்றும் வில் ஸ்மித் இருவரில் யார் சரி என்று விவாதிக்கிறார்கள். யாராக இருந்தாலும் ஒருவருடைய உடல் எடை, உயரம், கூந்தல் இவற்றை வைத்து கேலி செய்வது கூடாது. அதே நேரத்தில் உடல் ரீதியிலான வன்முறையும் தவறு" என்று கூறியிருக்கிறார்.

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்மித் தன் மனைவிக்காக இப்படி நின்றதில் எந்த தவறும் இல்லை. அவர் மன்னிப்பு கேட்டதால் எந்த விதத்திலும் தாழ்ந்துவிடவில்லை. ஒரு பெண் தனக்காக நின்று இதுபோன்ற சமயங்களில் பேச முடியும் என்றாலும் அவளுடைய கணவர் பேசும்போது அவள் மேலும் ஆசிர்வதிக்கப்பட்டவள். ஆஸ்கரே கிறிஸின் இந்த பேச்சுக்கு ஒப்புதல் கொடுத்தாலும் இவ்வாறான உடல் ரீதியிலான கேலி ஏற்கத்தக்கதல்ல" என்கிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவும், கிறிஸ் ராக்கின் இந்த உடல் கேலி நகைச்சுவை ரசிக்கத்தக்கதல்ல என்று பதிவிட்டு இருக்கிறார்.

பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வில் ஸ்மித்தின் இந்த செயலை எதிர்ப்பார்க்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார். நீது கபூர், "பெண்கள் மட்டும்தான் உணர்ச்சிகளை அடக்க தெரியாதவர்கள் என சொல்வார்கள். ஆனால்..." என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர ஹாலிவுட் பிரபலங்களான கார்டி பி, மரியா ஷிவர் என பலரும் வில் ஸ்மித்தின் செயலை பாராட்டியும் அதே நேரத்தில் உடல் ரீதியிலான வன்முறை தவறு எனவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in