ஷாருக் கான் உடன் மோதும் விஜய்?

ஜவான் - லியோ ரிலீஸ் விவகாரம்
விஜய் - அட்லீ -ஷாருக்
விஜய் - அட்லீ -ஷாருக்

விஜய் நடிக்கும் ’லியோ’ மற்றும் ஷாருக் கான் நடிப்பிலான ’ஜவான்’ ஆகிய திரைப்படங்கள் ஒருசேர வெளியாக இருப்பதாக வெளியாகும் தகவல்கள், விஜய் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்திருக்கின்றன.

பதான் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பாஷா ஷாருக் கான் நடிப்பில் வளர்ந்து வரும் திரைப்படம் ஜவான். 4 ஆண்டு இடைவெளியில் வெளியான ஷாருக் கான் திரைப்படம் என்ற வகையில், அவரது ரசிகர்களை பதான் திருப்தி செய்ததோடு, வசூலிலும் ரூ1000 கோடிக்கும் மேலாக குவித்து வருகிறது. எனவே எகிறியிருக்கும் ரசிக எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, ஜவான் திரைப்படத்தை மென்மேலும் செதுக்குமாறு படக்குழுவினரிடம் கேட்டிருக்கிறார் ஷாருக் கான்.

கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டில் வலது கால் வைத்திருக்கும் அட்லீ இயக்கும் திரைப்படம் என்பதால், அவரும் தன் பாணியிலான ஆக முடிந்த உழைப்பைக் கொட்டி வருகிறார். இவற்றால் திட்டமிட்டிருந்ததை விட ஜவான் வெளியீடு தள்ளிப்போகுமென தெரிகிறது. ஜூன் முதல் வாரத்தில் ஜவான் வெளியிடுவதாக அறிவித்திருந்தவர்கள் தற்போது அதனை அக்டோபருக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். இந்த வகையில், விஜய் நடிக்கும் ’லியோ’ திரைப்படத்துடன் ஷாருக் கானின் ’ஜவான்’ மோத இருக்கிறது.

’பதான்’ திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை விஜய் வெளியிட்டபோது, ஷாருக் கான் நெகிழ்ந்து நன்றி சொன்னார். இந்தி அளவுக்கு இல்லை என்றாலும், தமிழிலும் பதான் கணிசமான ஓட்டம் கொடுத்தது. இந்த நிலையில் பான் இந்தியா வெளியீடாக திட்டமிடப்பட்டிருக்கும் லியோ உடன் ஜவான் மோதுவது, விஜய் தரப்புக்கு சேதாரம் சேர்க்கும் என்கிறார்கள். முக்கியமாக, ’லியோ’ திரைப்படத்தை இந்தியிலும் வெளியிட முடிவு செய்திருப்பது, அடிவாங்கக்கூடும் என்கிறார்கள். விஜய்க்கான மார்க்கெட் மட்டுமன்றி, லோகேஷ் கனகராஜ்க்கும் இதில் ஒரு கணக்கு இருக்கிறது.

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ வெற்றியை அடுத்து பாலிவுட்டிலிருந்தும் லோகேஷ் கனகராஜ்க்கு அழைப்புகள் வருவதால், தன்னை நிரூபிக்க ’லியோ’வை அங்கே முன்னிறுத்தும் முடிவிலிருக்கிறார். விஜய் - லோகேஷ் என இருவருக்கும் லியோவின் இந்தி வெளியீடு இவ்வாறு முக்கியமாகிறது. ஆனால் ஜவான் முன்பாக லியோ என்றில்லை, இதர பாலிவுட் கான்களின் திரைப்படங்கள் வெளியானாலும் தற்போதைய சூழலில் எடுபடுவது சிரமமே. இதனால் லியோ வெளியீட்டை தள்ளி வைக்கலாமா அல்லது அட்லீ உடன் பேசிப் பார்க்கலாமா என லியோ தரப்பில் யோசிக்கிறார்கள்.

இவை எதையும் அறியாதவரா அட்லீ அல்லது வேண்டுமென்றே லியோ உடன் ஜவானை மோத விடுகிறாரா என்ற ஐயமும் சிலருக்கு எழுந்திருக்கிறது. பாலிவுட்டில் கால் பரப்ப முற்படும் விஜய், லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் எதிராக அட்லீ திட்டம் ஏதும் வைத்திருக்கிறாரா அல்லது அவ்வாறாக முற்படும் பாலிவுட் லாபிக்கு அவர் இரையாகி இருக்கிறாரா என்றும் விசனத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் கசிந்ததில், வளர்த்துவிட்ட விஜய்க்கு எதிராக அட்லீ போக்குகாட்டுதா என அவர்கள் கறுவி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in