`நீங்க 160 கோடி வாங்குவீங்க, நஷ்டத்தை யார் தாங்குறது?’: பிரபல ஹீரோவுக்கு எதிராக விநியோகஸ்தர்கள் போர்க்கொடி!

`நீங்க 160 கோடி வாங்குவீங்க, நஷ்டத்தை யார் தாங்குறது?’:  பிரபல ஹீரோவுக்கு எதிராக விநியோகஸ்தர்கள் போர்க்கொடி!

படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதால், பிரபல ஹீரோ நஷ்டத்தை சரிகட்ட வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் போர்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல பாலிவுட் ஹீரோ அக்‌ஷய்குமார். தமிழில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். இவர் நடித்து ’பச்சன் பாண்டே’ என்ற படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இது தமிழில் வெளியான ’ஜிகிர்தண்டா’ படத்தின் ரீமேக். 180 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 68 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. கடுமையான நஷ்டத்தைச் சந்தித்த விநியோகஸ்தர்கள், அதை அக்‌ஷய் குமார் ஈடுகட்டுவார் என்று நம்பி இருந்தனர். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை.

சாம்ராட் பிருத்விராஜ், அக்‌ஷய் குமார், மனுஷி சில்லார்
சாம்ராட் பிருத்விராஜ், அக்‌ஷய் குமார், மனுஷி சில்லார்

இந்நிலையில் அவர் நடித்து ’சாம்ராட் பிருத்விராஜ்’ என்ற படம் கடந்த 3-ம் தேதி வெளியானது. 250 கோடியில் உருவான இந்தப் படம் இதுவரை வெறும் 48 கோடியை மட்டுமே வசூலித்திருப்பதாகக் கூறுகின்றனர். அக்‌ஷய் குமார் படங்களின் அடுத்தடுத்த தோல்வியால், கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விநியோகஸ்தர்கள், ஒரு படத்துக்கு 160 கோடி சம்பளம் வாங்கும் அக்‌ஷய், நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் எதிர் பார்க்கின்றனர்.

இதுபற்றி பீகார் மாநில விநியோகஸ்தர் ரோஷன் சிங் என்பவர் கூறும்போது, ``தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி, ’ஆச்சார்யா’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். அதேபோல, நடிகர் அக்‌ஷய் குமாரும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுப்பதுதான் நியாயமானதாக இருக்கும். சில விநியோகஸ்தர்கள் பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் படங்களால் மொத்தமாக திவாலாகிவிட்டனர்'' என்கிறார்.

பீகாரின் முன்னணி விநியோகஸ்தர் சுமன் சின்ஹா என்பவர் கூறும்போது, ``ஏ லிஸ்ட் நடிகர்கள் என்றழைக்கப்படும் சூப்பர் ஸ்டார்கள், தங்கள் காலம் முடிந்துவிட்டது என்பதை உணர வேண்டும். கார்த்திக் ஆர்யன் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்கள், வரவேற்பை பெறுகிறார்கள். அக்‌ஷய் குமார், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுப்பாரா என்பது பற்றி தெரியாது. அவர்கள், தங்கள் சொந்த வங்கி இருப்பை தவிர வேறு எதையும் கருத்தில் கொள்வதில்லை'' என்கிறார் ஆவேசமாக.

சமீபத்தில் வெளியான ஷாகித் கபூரின் ஜெர்சி, கங்கனா ரனாவத் நடித்த `தாக்கத்' உட்பட பல இந்தி படங்கள், தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in