நடிகர் தனுஷின் 'வாத்தி' வருமா, வராதா?

நடிகர் தனுஷின் 'வாத்தி' வருமா, வராதா?

விநியோக சிக்கலில் கிடக்கும் நடிகர் தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் வருமா, வராதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'வாத்தி'. நடிகர் தனுஷ் நடிக்கும் இப்படத்தில் சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் விநியோக உரிமை சென்னையில் உள்ள சில மீடியேட்டர்களின் தவறான செயல்பாடுகளால் தற்போது சிக்கலுக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் டிச.2-ம் தேதி ‘வாத்தி’ திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் செப்.19-ம் தேதி அறிவித்திருந்தது. இதனால் படத்தை வாங்க ஆர்வம் காட்டிய விநியோகஸ்தர்களிடமும் டிச.-2-ம் தேதி உறுதியாக படம் வெளிவரும் என சொல்லப்பட்டது.

இதனை நம்பிய ஆரண்யா சினி கம்பைன்ஸ் என்ற விநியோக நிறுவனம் சிட்டி, என்எஸ்சி நீங்கலாக 5 ஏரியாக்களுக்கு விநியோக உரிமையைக் கேட்டது. இதற்காக 8 கோடி ரூபாய் பேசி முடிக்கப்பட்டது. கடந்த அக்.18-ம் தேதி முன்பணமாக 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அக்.24-ம் தேதி தீபாவளி என்பதால், அதற்குப் பிறகு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என தயாரிப்பாளர் தரப்பு கூறியதை விநியோக நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

ஆனால் சொன்னபடி தயாரிப்பு நிறுவனம் தீபாவளி முடிந்து, இரு வாரங்கள் கடந்தும் ஒப்பந்தத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது. விநியோக நிறுவனம் கொடுத்த அழுத்தம் காரணமாக நவ.6-ம் தேதி ஒப்பந்தத்தின் மாதிரியை அனுப்பிய தயாரிப்பு நிறுவனம், 2023 ஏப்ரல் அல்லது பிப்ரவரி மாதம் படம் வெளியாகும் என கூறியது.

இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த விநியோக நிறுவனம், கவர்ச்சிகரமான வட்டி அடிப்படையில் பணம் கடனாக பெறப்பட்டு முன் பணம் அனுப்பப்பட்டுள்ளதால் பல மாதங்கள் காத்திருக்க இயலாது என்றும், சொன்னபடி டிச.2-ம் தேதி படத்தை வெளியிடவேண்டும் என்றும், இல்லையென்றால் முன் பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

ஆனால், படத்தை டிச. 2-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் விரும்பாததால் முன் பணத்தை உடனே திருப்பித் தந்துவிடுவதாகவும், வட்டி எதுவும் தர முடியாது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனை ஏற்று கொண்ட விநியோக நிறுவனம் உடனடியாக பணத்தை கொடுத்தால் வட்டி எதுவும் தேவையில்லை என தெரிவித்தது. ஆனால் சொன்னபடி நவ. 6-ம் தேதி பணத்தை தராமல் நவ. 23-ம் தேதி ரூ.2 கோடி மட்டும் கொடுத்துவிட்டு, இரண்டு நாட்களில் மீதி ரூ.1 கோடியை தருவதாக தயாரிப்பு நிறுவனம் உத்திரவாதம் அளித்தது.

அதனையும் விநியோகம் ஏற்றுகொண்ட நிலையில் சொன்னபடி நவ.– 26-ம் தேதி ரூ.1 கோடி பணத்தைத் திரும்பத் தரவில்லை என்பதால் விநியோக நிறுவனம் மன உளைச்சலுக்கு உள்ளானது. இந்நிலையில் படம் 2023 பிப்.17-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டதால், வட்டி இழப்பை ஈடு கட்டும் பொருட்டு பேசிய விலைக்கே படத்தை விநியோகம் செய்வதாகவும், ரூ.1 கோடி பணத்தை முன் பணமாக வைத்துக் கொள்ளுமாறும் மீதி தொகை ரூ.7 கோடியை பட வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தருவதாகவும் விநியோக நிறுவனம் தயாரிப்பாளருக்கு கடிதம் அனுப்பியது.

அந்தக் கடிதத்திற்கு பதில் வராததாலும், ரூ.1 கோடி பணத்தையும் தராததாலும் விநியோக நிறுவனம் டிச. 8-ம் தேதி சென்னை உயர்நிதிமன்றத்தை அணுகி காப்புரிமை சட்டப்படி தங்களது முன் பணம் தயாரிப்பாளர் வசம் உள்ளதால் படத்தின் உரிமை தங்களுக்கே சொந்தம் என்றும், பேசிய தொகையில் மீதமுள்ள ரூ.7 கோடியை பட வெளியீட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் நீதிமன்றத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர் தரப்பை டிச.15-ம் தேதி ஆஜராகுமாறு கூறியது. ஆனால், தயாரிப்பு நிறுவனமோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை டிச. 21-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என கூறப்படுகிறது.

காப்புரிமை சட்டப்படி தற்போதைய நிலையில் ஐந்து ஏரியாக்களின் விநியோக உரிமை ஆரண்யா சினி கம்பைன்ஸ் வசம் உள்ளதால் மீடியேட்டர்களின் பேச்சை கேட்டு விநியோகஸ்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என விநியோக நிறுவன தரப்பு எச்சரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in