
ரசிகர் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தை நடிகர்கள் கவனித்துக் கொள்வார்களா என சென்னையில் உயிரிழந்த நடிகர் அஜித்தின் ரசிகர் பரத்குமாரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவைச் சேர்ந்தவர் பரத்குமார் (19). தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் குடும்ப சூழல் சரியில்லாத காரணத்தால் கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தாயாரும் கூலி வேலைக்கும் சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.
நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான பரத்குமார், 'துணிவு' படம் வெளியாவதை ஒட்டி கடந்த மூன்று மாதங்களாக அப்படத்தை பற்றியே எல்லோரிடமும் பேசிவந்ததுடன் படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தார்.
இந்நிலையில் 'துணிவு' படம் இன்று வெளியான நிலையில் படம் பார்க்கவேண்டி பிளாக்கில் 550 ரூபாய் கொடுத்து ரோகினி தியேட்டரில் டிக்கெட் வாங்கி உள்ளார். நேற்று இரவு 'துணிவு' படம் ஃபர்ட்ஸ் ஷோ ரிலீஸ் ஆவதையொட்டி கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பூந்தமல்லி சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அஜித் ரசிகர்கள் ஆட்டம் ,பாட்டம் கொண்டாட்டம் என இருந்த நிலையில் அந்த சாலை வழியாக மெதுவாக ஊர்ந்து வந்த கன்டெய்னர் லாரி மீது ஏறி பரத்குமார் ஆட்டம் போட்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி வேகம் இயக்கிய போது நிலை தடுமாறி ஓடும் லாரியில் இருந்து கீழே குதித்த பரத்குமாருக்கு, லாரி கம்பியில் இடித்து முதுகுத்தண்டு உடைந்தது. இதனால் படுகாயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பரத்குமார் இன்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பரத்குமாரின் சித்தி ஆரோக்கியம் கூறுகையில் ” வேலைக்குச் சென்று சம்பாதித்த 1000 ரூபாயை 'துணிவு' பட டிக்கெட்டிற்காக எடுத்து சென்ற பரத்குமார் பின்னர் லாரியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக போலீஸார் எங்களிடம் தெரிவித்தனர். நடிகர்களை ரசிகர்கள் நேசிக்கலாம், ஆனால் அவர்களுக்கு மேலாக பெற்றோர்களை நேசிக்க வேண்டும். அவர்களைத் தவிர பெரிய ஹீரோ யாரும் இல்லை. பிடித்த நடிகர்களுக்காக பாலாபிஷேகம் செய்வது, கட் அவுட் வைப்பது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், தொடர்ந்து இது போன்ற மரணம் நிகழ்ந்து வருவது வேதனையளிக்கிறது. ரசிகர் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தை அஜித், விஜய், கவனித்து கொள்வார்களா? நடிகர்கள் அவர்களது பெற்றோர் மீது வைத்திருக்கும் பாசத்தை ரசிகர்கள் தங்கள் பெற்றோர் மீது வைப்பதில்லை. அதை நடிகர்கள் புரியவைக்க வேண்டும். சினிமாவின் மீது கொண்ட மோகத்தின் காரணமாக எங்கள் குடும்பத்தில் ஓருவரை இழந்து தவிக்கிறோம். இதுபோன்ற இழப்பு வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது” என்று வேதனையுடன் கூறினார்.