மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நடிகர் அஜித் இன்று வருகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு நேரில் வரமுடியாத பொதுமக்களும் திரைப்பிரபலங்களும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் எனப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு விஜயகாந்த் குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். அந்த வகையில், தற்போது சென்னை வந்துள்ள நடிகர் அஜித், விஜயகாந்த் நினைவிடத்திற்கு போய் அஞ்சலி செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத பல பிரபலங்களும் சமூகவலைதளத்தில் பதிவும் வீடியோவும் பகிர்ந்து வந்தனர். ஆனால், நடிகர் அஜித் எதுவும் செய்யவில்லை. அதற்குக் காரணம் அவர் காலில் அடிபட்டிருந்தது எனச் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கடுத்த நாட்களிலேயே புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நடிகர் அஜித் அங்கு ரசிகை ஒருவருடன் ஆடிப்பாடியும், மகளின் பிறந்தநாளுக்காக கேக் வெட்டியும் கொண்டாடினார். இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆட்சேபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘கலைஞர்100’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் தற்போது சென்னை வந்துள்ளார். கையோடு விஜயகாந்த் நினைவிடத்திற்கும் போய் அவர் அஞ்சலி செலுத்த உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.