கதாநாயகர்கள் இளமையாகத் தெரிய, நாங்கள் உடலை வருத்திக்கொள்ள வேண்டுமா?

நடிகை வித்யா பாலன் பளிச்
கதாநாயகர்கள் இளமையாகத் தெரிய, நாங்கள் உடலை வருத்திக்கொள்ள வேண்டுமா?

பாலிவுட் நடிகையான வித்யா பாலன், ‘பரிணீதா’, ‘லகே ரஹோ முன்னாபாய்’, ‘கஹானி, ‘நோ ஒன் கில்டு ஜெஸிகா’, ‘தி டர்ட்டி பிக்சர்’ போன்ற படங்கள் மூலம் புகழ்பெற்றவர். சின்ன இடைவெளிக்குப் பின்னர் அவர் நடித்த ‘துமாரி ஸுலு’, ‘மிஷன் மங்கள்’ போன்ற படங்களும் அவருக்குப் பெயர் வாங்கித் தந்தவை. ஓடிடி தளத்திலும் வித்யா பாலன் நடித்த ‘ஷகுந்தலா தேவி’, ‘ஷேர்னி’ போன்ற படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் அவர் நடிப்பில் வெளியான ‘ஜல்ஸா’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நடிகை என்பதால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அதிகம் மெனக்கெடாமல் இயல்பான தோற்றத்திலேயே நடித்து ரசிகர்களைக் கவர்ந்துவருகிறார் வித்யா பாலன்.

இந்நிலையில், சினிமாவில் கதாநாயகிகள் உடல் எடை குறைத்து இளமையாகவே இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். “நம் விரலில் உள்ள ஐந்து விரல்களும் ஒன்று போல இருப்பது இல்லை. அது போலத்தான் நாம் அனைவரும். நம் உடலுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். எப்போது அதை உணர்ந்தேனோ அப்போதில் இருந்து சினிமாவுக்காக என் உடலை வருத்திக்கொள்வதை விட்டுவிட்டேன்” என்று கூறியிருக்கும் வித்யா பாலன், “முன்பெல்லாம், நிலைக்கண்ணாடியில் பார்க்கும்போது எனக்கே என்னைப் பிடிக்காது. ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு என் உடல் எப்படியோ அப்படியே நான் ஏற்றுக்கொண்டு விரும்பப் பழகிவிட்டேன். இது எனக்கு மன அமைதியைக் கொடுத்தது. என்னை இன்னும் அழகாக்கியது” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “இங்குள்ள கதாநாயகர்கள் அனைவரும் இளமையாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறார்களா என்ன? அவர்கள் திரையில் இளமையாகத் தெரிய, உடன் நடிக்கும் கதாநாயகியும் ஏன் உடல் எடையைக் குறைத்து என்றும் இளமையாக இருக்க வேண்டும்? நாயக நடிகர்களின் பாதுகாப்பின்மைதான் ஹீரோயின்கள் மீது அழுத்தமாக மாறுகிறது” என்றும் கூறியிருக்கிறார் வித்யா பாலன்.

திருமணம், பிரசவத்துக்குப் பிறகு நடிகைகளும் மற்ற துறைகளைச் சேர்ந்த பெண்களும் வேலைக்குச் செல்வது என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வித்யா பாலன்!

Related Stories

No stories found.