`3 ஆண்டுகளாக ஏன் வழக்கு தொடரவில்லை?'- சிவகார்த்திகேயனுக்கு நீதிபதி கேள்வி

`3 ஆண்டுகளாக ஏன் வழக்கு தொடரவில்லை?'- சிவகார்த்திகேயனுக்கு நீதிபதி கேள்வி

சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு தொடர்ந்தது ஏன்? என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

`மிஸ்டர் லோக்கல்' படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள 4 கோடி சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரியும், தனக்கு வழங்க வேண்டிய தொகையை தரும் வரை ஞானவேல் ராஜா படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் ஞானவேல் ராஜா தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த, `மிஸ்டர் லோக்கல்' படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த படத்தின் இயக்குநராக ராஜேஷ்தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால்தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும் அந்த படத்தால் தமக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் ஞானவேல் தரப்பில், `மிஸ்டர் லோக்கல்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்களுக்கு பணத்தை வழங்குமாறு தம்மிடம் சிவகார்த்திகேயன் கூறிவிட்டு தற்போது இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், டி.டி.எஸ் தொடர்பாக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு வேறு அமர்வில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து ஏன் மனுத்தாக்கல் செய்தீர்கள் என்றும் டி.டி.எஸ். விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு மனு நிலுவையில் இருக்கும்போது மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? எனவும் சிவகார்த்திகேயனுக்கு கேள்வி எழுப்பியதோடு, வழக்கு விசாரணையை வரும் 13-ம் தேதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.