தொடர் தோல்வியில் பாலிவுட் சினிமா: பான் இந்தியா படங்கள் காரணமா?

தொடர் தோல்வியில் பாலிவுட் சினிமா: பான் இந்தியா படங்கள் காரணமா?

திடீரென இப்படியொரு தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது பாலிவுட். இதற்கு முன் இப்படியில்லை என்கிறார்கள். ஒரு படம் தோல்வியடைந்தால், அடுத்தப் படம் கை கொடுக்கும் என்ற காலம் போய், சமீபத்தில் வெளியான படங்கள், தயாரிப்பாளர்களைத் தலைகுப்புறத் தள்ளியிருக்கிறது, கருணையின்றி. ஒரு காலத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் எடுத்து மிரட்டிய பாலிவுட்டுக்கு இப்போது என்னாச்சு?

பான் இந்தியா படங்கள் பற்றிய பேச்சு அதிகரித்துள்ள நிலையில், பாலிவுட் படங்களுக்கு ஏற்பட்டு வரும் தோல்வி, கொஞ்சம் அதிர்ச்சியையும் நிறைய கேள்வியையும் உருவாக்கி இருக்கிறது.

புஷ்பா, ஆர்ஆர்ஆர், கே.ஜி.எஃப் 2 படங்களின் வசூல், பாலிவுட்டை மிரட்டிப் பார்த்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ’விக்ரம்’ படத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

கதை, மேக்கிங், அடுத்த தலைமுறை ஸ்டைல், கதை சொல்லும் உத்தி என இந்தப் படங்கள் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருப்பதால், மொழி தாண்டி இந்தப் படங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்த பான் இந்தியா வெற்றிதான், பாலிவுட் படங்களின் தொடர் தோல்விக்கு காரணமா?

தெலுங்கில் வெளியான ’ஜெர்ஸி’யை இந்தியில் ரீமேக் செய்தார்கள். ஷாகித் கபூர் நடித்திருந்தார். சுமார் 40 கோடியில் உருவான இந்தப் படம், ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆனது. பட்ஜெட்டில் பாதியைதான் வசூலித்ததாகச் சொல்கிறார்கள். அதே மாதத்தில் வெளியான அஜய் தேவ்கனின் ’ரன்வே 34’, 65 கோடியில் உருவாகி, 48 கோடியை மட்டுமே ஈட்டியிருக்கிறது.

அக்‌ஷய் குமார் நடித்த ’பச்சன் பாண்டே’ (ஜிகிர்தண்டா ரீமேக்), 180 கோடியில் உருவாகி, வெறும் 68 கோடியை மட்டுமே வசூலித்திருக்கிறது. கங்கனா நடிப்பில் வெளியான ’தாக்கத்’ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அட்டர் பிளாப் என்கிறார்கள்.

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த 3-ம் தேதி வெளியான, ’சாம்ராட் பிருத்விராஜ்’ படத்தை 250 கோடியில் உருவாக்கினார்கள். இதுவரை 55 கோடியை மட்டுமே வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு அக்‌ஷய் குமாரின் சம்பளம் 160 கோடி. ஏன் இந்த தொடர் தோல்வி? தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டோம்.

தயாரிப்பாளர் தனஞ்செயன்
தயாரிப்பாளர் தனஞ்செயன்

‘ரசிகர்கள் கரோனாவுக்குப் பிறகு தேர்ந்தெடுத்துதான் சினிமா பார்க்கிறார்கள். வழக்கமான கதைகளைத் தாண்டி புதிதாக எதிர்பார்க்கிறார்கள். அது தெலுங்கு படமா, தமிழா, மலையாளமா என்பதைப் பார்ப்பதில்லை. கதை நன்றாக இருந்தால் பார்க்கிறார்கள். இந்தியில், ’புஷ்பா’ 100 கோடி வசூலித்திருக்கிறது, ’ஆர்ஆர்ஆர்’ 265 கோடியும், கேஜிஎப் 2, ரூ. 400 கோடியும் வசூல் செய்திருக்கிறது. வழக்கமாக இந்தித் திரைப் படங்களைப் பார்க்கும் ரசிகர்கள்தான் இந்தப் படங்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

அக்‌ஷய் குமாரைப் பொறுத்தவரை, அவர் ஒரு கட்டத்தில் முன்னணியில் இருந்தார். இப்போது அவர் , தொடர் தோல்வியை சந்தித்து வருவதற்கு காரணம், 2 மாதத்துக்கு ஒரு முறை அவர் படங்கள் ரிலீஸ் ஆவதுதான். ’சாம்ராட் பிருத்விராஜ்’ நல்லப் படமாக இருந்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து அவரைப் பார்க்க விரும்பவில்லை. அவர் கொஞ்சம் இடைவெளிவிட வேண்டும். இதற்கிடையே கார்த்திக் ஆர்யன் நடித்துள்ள ‘பூல் புலயா 2 (Bhool Bhulaiyaa 2) படம் வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல கன்டென்ட் இருந்தால் ரசிகர்கள் வெற்றி பெற வைக்கிறார்கள்’' என்கிறார் அவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in