விக்ரமன் I அஸீம் I ஷிவின்: பிக்பாஸ் வெற்றியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறம் வெல்லுமா?
விக்ரமன் I அஸீம் I ஷிவின்: பிக்பாஸ் வெற்றியாளர் யார்?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6வது சீஸன் ஒரு வழியாக நிறைவடைகிறது. டைட்டில் வின்னர் தேர்வுக்கான இறுதி சுற்றில் அஸீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவர் மோதுகின்றனர். 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிறைவில் வெல்லப்போவது யார் என்பது இன்று தெரிந்துவிடும்.

பிக்பாஸ் போட்டியாளர்களின் தனிப்பட்ட திறமைகள், அவற்றை அவர்கள் வெளிப்படுத்திய விதம் ஆகியவற்றைவிட, மக்கள் அளிக்கும் வாக்குகளே போட்டியாளர்களின் வெற்றியை பெரும்பாலும் தீர்மானிக்க இருக்கின்றன. அதிலும் நடப்பு சீஸனுக்கான இறுதிச் சுற்றில் வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிப்பதில் திணறடிப்பை தந்திருக்கிறார்கள். அந்தளவுக்கு எந்த வகையிலும் சோடை போகாத போட்டியாளர்கள் இறுதி சுற்றில் மோதுகிறார்கள்.

பிக்பாஸை ஜெயிக்க வைத்த ஷிவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட புதுமையானது என்பதற்கு பொருள் சேர்க்கும் வகையில் ஷிவின் இந்த சீஸனில் இணைந்தார். பால் புதுமையர் இதற்கு முந்தைய சீஸனிலும் இடம்பெற்றனர் என்ற போதும், ஏனோ அவர்கள் நீடிக்கவில்லை. இந்த சூழலில், ஷிவின் இந்த சீஸனில் இடம்பெற்றதும், நாளுக்கு நாள் பார்வையாளர் உள்ளங்களை கொள்ளை கொண்டதும் நடந்தது.

சமூகத்தில் புரையோடிய பார்வைகள் அனைத்தையும் பொசுக்கி, தன்னுடைய செயல்பாடுகள் மற்றும் முனைப்புகள் வாயிலாகவே பால் புதுமையர் மீதான நல்லபிமானங்களை வாரிக் குவித்திருக்கிறார் ஷிவின். நாள்போக்கில் பால் புதுமையருக்கான அடையாளத்தையும் மறக்கடித்தவராக பார்வையாளர் மனங்களில் ஷிவின் குடிபுகுந்ததும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆகப்பெரும் வெற்றியாக சொல்லலாம். ஷிவின் வெல்லலாம் அல்லது தோற்கலாம். ஆனால் ஷிவினை முன்னிறுத்தியதில் பிக்பாஸ் நிகழ்ச்சி வென்றிருக்கிறது.

அடித்து ஆடிய அஸீம்

நடப்பு சீஸன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆட்ட நாயகன் என்றால் அது அஸீம் மட்டுமே. பிக்பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தீனியிட்ட வகையில், வெளியுலகில் எக்கச்சக்கமாய் வரவேற்பை அள்ளி முடிந்திருக்கிறார் அஸீம். வரவேற்புக்கு இணையாக சர்ச்சைகளும் அவரைச் சுற்றி வட்டமடித்தன. அஸீம் உஷ்ணமாகும்போது வம்புகள், வாய்ச் சவடால்கள், வரம்பு மீறல்கள் என சகலமும் கொட்டும். அஸீமை திட்டிக்கொண்டே ரசித்த பலரும் நாளடைவில் அவரது ரசிகர்களாகிப் போனதும் நடந்திருக்கிறது.

பிக்பாஸ் வீட்டின் பிரத்யேக விளையாட்டுகள், வியூகங்கள் அனைத்துக்கும் ஆட்பட்டு, ஆட்டம் ஒவ்வொன்றிலும் சிரத்தையோடு விளையாடியவர் அஸீம். வெற்றிக்காக எதையும் செய்யத் துணிந்த வீரராக தன்னை முன்னிறுத்தினார். வரம்பு மீறி தவறாக பேசுவதும், செயல்படுவதும் பின்னர் அவற்றுக்காக மன்னிப்பு கோருவதும் அஸீமின் அடையாளங்களாக புளிப்பு தட்டவும் செய்தன. ஆனபோதும், சின்னத்திரையின் மெகாசீரியல் ரசிகக் கண்மணிகளுக்கு அஸீம் பிடித்துப்போனதில் வியப்பில்லை. நடப்பு பிக்பாஸ் சீஸனில் இறங்கியடித்த ஒரே ஆட்டக்காரர் என்றால அவர் அஸீம் மட்டுமே.

‘பூமர்’ புரட்சியாளர் விக்ரமன்

விளையாட வந்த இடத்தில் வாழ்ந்து காட்ட முயற்சித்தவர் விக்ரமன். தனது நடப்பு வாழ்க்கைக்கும், வாழ விரும்பியதற்கும், தான் கைக்கொண்ட சித்தாந்தங்களுக்குமாக, பிக்பாஸ் வீட்டில் ஒருவர் வெளிப்படையாக வளைய வந்த அதிசயமும் இந்த சீஸனில் நடந்தது. விக்ரமன் கொண்டிருந்த கொள்கை, அரசியல், அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் எல்லாமே ஏகோபித்த வரவேற்பை பெற்றன. பிக்பாஸ் வீட்டின் விளையாட்டுகளுக்கு ஈடுகொடுத்து விளாயவும் செய்தவர், தனது தன்மானத்துக்கும், சுய மரியாதைக்கும் இழுக்கு நேர்ந்த போது சீறவும் செய்தார். தனக்கு மட்டுமன்றி எவருக்கு தவறு இழைக்கப்பட்டாலும் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

தனக்கான சுயநல ஆட்டத்துக்கு மட்டுமே அழுத்தம் தரும் பிக்பாஸ் நெருக்கடிகளுக்கு மத்தியில், பிறருக்காகவும் குரல் கொடுத்தார். சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு எதிராக முழங்கியது, அம்பேத்கர் கருத்தையும் வாழ்க்கையையும் முன்வைத்தது, கட்சி கரைவேட்டியுடன் உலவியது... உள்ளிட்டவையும் பிக்பாஸ் வீடு இதுவரை கண்டிராதது. கமல்ஹாசானால் அதிகம் சிலாகிக்கப்பட்ட வகையிலும் விக்ரமன் வரவேற்பு பெற்றிருக்கிறார். அறம் வெல்லும், புரட்சி நிகழும் என்றெல்லாம் பிக்பாஸ் களத்திலும், வெகுஜன ரசிக தளத்திலும் முற்றிலும் பிடிபடாத முழக்கங்களை முன்வைத்தார்.

இதுவே ஒரு கட்டத்தில் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் ’பூமர்’ போட்டியாளராக விக்ரமன் வசைபாடலுக்கு ஆளாகவும் வாய்ப்பானது. விக்ரமனுக்கு ஆதரவாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குரல் கொடுத்ததும், நடப்பில் விக்ரமனுக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. அரசியல் மற்றும் சமூக தளங்களில் திருமாவளவனோடு மாற்றுக்கருத்து கொண்டவர்கள் எல்லோரும் விக்ரமனுக்கு எதிராக வாக்களிக்க ஆரம்பித்தனர்.

அறம் வெல்லுமா?

விக்ரமன் எழுப்பிய கேள்வி போன்றே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறம் வெல்லுமா என்பது, மக்கள் அளிக்கும் வாக்கின் கையில் இருக்கிறது. வெற்றியாளர் யார் என்பதைவிட, அதை நோக்கிய அத்தியாயங்களின் பாதை பார்வையாளர்களுக்கு உவப்பு அளிப்பதாக அமைய வேண்டும். அந்த வகையில் முந்தைய சீஸன்களில் இருந்து மாறுபட்டதாக நடப்பு சீஸன் பிக்பாஸ் நிகழ்ச்சி வென்றிருக்கிறது. இடையில் தொய்வு காட்டிய அத்தியாயங்கள், கமல் தொடங்கி ரசிகர்கள் வரை அதிருப்தியை எதிரொலித்ததில் சுதாரித்துக்கொண்டு விறுவிறுப்பை தக்க வைத்திருக்கின்றன.

விக்ரமன் எழுப்பிய ‘அறம் வெல்லுமா ?’ என்ற வினாவும், பிக்பாஸ் மற்றும் அதன் ரசிகர்களைப் பொறுத்தளவில், அறம் என்பதன் அர்த்தம் என்ன என்பதும் அடுத்த சில மணி நேரங்களில் தெளிவாகிவிடும். அது விக்கிபீடியா தளம் முன்கூட்டியே அறிவித்ததுபோல் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in