’டைட்டிலில் யாருக்கு முதலிடம்?’ மூன்று நடிகைகள் மத்தியில் மூண்ட சிக்கலை முடித்து வைத்தது எப்படி?

’டைட்டிலில் யாருக்கு முதலிடம்?’ மூன்று நடிகைகள் மத்தியில் மூண்ட சிக்கலை முடித்து வைத்தது எப்படி?

நடிகர்களில் முக்கியமான இருவர் சேர்ந்து நடிக்கும்போதும், நடிகைகள் ஒரே படத்தில் நடித்தாலும்... ‘யார் பெயரை டைட்டிலில் முதலில் போடுவது?’ என்பதில் தயாரிப்பாளர் தரப்பில் குழப்பமும், நடிக நடிகைகளிடையே சிக்கலும் எழவே செய்யும். கடந்த வருடம் வெளியான ராஜ்கமலின் ‘விக்ரம்’ படத்தில், கமல், விஜய் சேதுபதி, பகத்பாசில் என்றெல்லாம் நடித்திருக்க, ‘கமல் பெயர்தான் முதலில் இடம்பெறும்’ என எல்லோருமே நினைத்தார்கள். ஆனால், இவர்களின் பெயருக்கு அடுத்துத்தான் கமலின் பெயர் இடம்பெற்றது. சில தருணங்களில் இவை, பிரச்சினையே இல்லாமல் சாதாரணமாகவும் இயல்பாகவும் முடிந்துவிடும். ஆனால் இப்படி எப்போதாவது மட்டுமே நடந்தேறும்!

ஜெமினி நிறுவனம் தயாரித்த ‘ஒளிவிளக்கு’ படத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா, செளகார்ஜானகி நடித்திருந்தார்கள். எம்ஜிஆருக்கு ஜெயலலிதா ஜோடி என்றபோதும், செளகார் ஜானகியால்தான், எம்ஜிஆர் தன் கெட்ட குணங்களில் இருந்து திருந்தி வாழும் முடிவுக்கு வருவார். எனவே செளகார் ஜானகிக்கு கூடுதல் முக்கியத்துவம் கதையில் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் செளகார் ஜானகி, ஜெயலலிதாவைப் பார்க்கும்போது, செளகார் ஜானகி சீனியர் நடிகையாகவும், அப்போது கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருந்தார். எனவே ஜெமினி நிறுவனம், டைட்டிலில் எம்ஜிஆருக்கு அடுத்து, செளகார் ஜானகியின் பெயரை டைட்டிலில் போட முடிவு செய்திருந்தது.

ஆனால், இடையே இந்த தகவல் வெளிப்பட்டதும், பலத்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, எம்ஜிஆருக்கு அடுத்து ஜெயலலிதாவின் பெயரை டைட்டிலிலும் அதன் பிறகு செளகார் ஜானகியின் பெயரையும் போடுவதற்கும் முடிவானது. அதன்படியே எம்ஜிஆரின் 100வது படமான ‘ஒளிவிளக்கு’ படத்தில், எம்ஜிஆர், அடுத்து ஜெயலலிதா, அதையடுத்து செளகார் ஜானகி என்று டைட்டிலில் பெயர்கள் இடம்பெற்றன.

இப்படியொரு பிரச்சினை, ஏவி.எம். நிறுவனத்துக்கும் வந்தது. 1962ம் ஆண்டு, சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, செளகார் ஜானகி, சரோஜாதேவி, மாஸ்டர் கமல், தங்கவேலு என பலரும் நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’ படம் வெளியானது. படத்தில் ஜெமினிக்கு முதல் மனைவியாக சாவித்திரி நடித்திருப்பார். அதன் பிறகு அவர் இறந்துவிட்டார் என நினைத்து செளகார் ஜானகியை திருமணம் செய்துகொள்வார்.

ஆனால் பார்வையற்ற நிலையில் சாவித்திரி உயிருடன் இருப்பார். ஜெமினி, சாவித்திரி, செளகார்... இந்த மூவருக்கும் இடையே தன் நண்பன் ஜெமினிக்காக எல்லா விஷயங்களையும் ஜீரணித்துக் கொண்டு, சாவித்திரிக்கும் அவர் மகன் கமலுக்கும் அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றி வருவார்.

‘எப்படியாவது கணவரை நம் அண்ணன் கண்டுபிடித்துவிடுவார்’ என்று சாவித்திரி இருப்பார். ‘இந்த நண்பர் வந்ததிலிருந்துதான் நம் கணவர் பழையபடி கலகலப்பாகவே இல்லை’’ என செளகார் ஜானகி குமுறிக்கொண்டிருப்பார். நடுவே, செளகாரின் தங்கை சரோஜாதேவி, சிவாஜியைக் காதலிப்பார். அவரும்தான்!

இப்படிப்பட்ட கதை முடிச்சுகள் கொண்ட திரைக்கதை பிரமாதமாக படமாக்கப்பட்டிருக்கும். படத்தை எடுத்து முடிக்கும்போதுதான், டைட்டிலில் பெயர் போடுகிற பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

செளகார் ஜானகியும் சாவித்திரியும் சீனியர் நடிகைகள். கதைப்படியும் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அன்றைய தேதிக்கு, சரோஜாதேவியின் கால்ஷீட் கிடைத்தாலே, அந்தப் படத்துக்கு ரசிகர்கள் முதல்நாளே தடதடவென வந்துவிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. எனவே, டைட்டிலில் சரோஜாதேவி தன் பெயரை, நடிகைகளின் பட்டியலில் முதலாவதாகப் போடச் சொல்லி கேட்டுக்கொண்டாராம்.

நடிகையர் திலகம் என்று போற்றப்படுகிற சாவித்திரி, ஒருமுறை வார இதழுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில், ‘’முதலில் என் பெயர் வரவேண்டும். அடுத்து செளகார் ஜானகி பெயர் வரவேண்டும். இதன் பிறகுதான் சரோஜாதேவி பெயர் வரவேண்டும். அல்லது முதலில் என் பெயரை அடுத்து சரோஜாதேவி, பிறகு செளகார் ஜானகி என்றும் போடலாம். ஆனால் இந்தப் பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போனது. ஏற்கெனவே, ‘எங்கள் வீட்டு மகாலட்சுமி’ திரைப்படத்தில், முதலில் கண்ணாம்பாவின் பெயர் டைட்டிலில் வரும். அடுத்துத்தான் என் பெயரைப் போட்டார்கள். சரியென்று நானும் ஏதும் சொல்லாமல், விட்டுவிட்டேன். ஆனால், ‘பார்த்தால் பசி தீரும்’ பட டைட்டிலில் பெயர் போடுகிற பிரச்சினை அவ்வளசு சுலபமாகத் தீரவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பீம்சிங்கும், மெய்யப்பச் செட்டியாரும் இதுகுறித்து கலந்து பேசினார்கள். நடிகைகளிடமும் பேசிப்பார்த்தார்கள். எந்தப் பலனும் ஏற்படவில்லை. கடைசியாக, ஏவி.எம். சின்னம் வந்ததை அடுத்து, ‘பார்த்தால் பசி தீரும்’ என்று டைட்டில் வரும். இதன் பின்னர் எல்லார் முகங்களையும் ஒரே ஸ்க்ரீனில் காட்டி, ‘உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று டைட்டில் போட்டு ஒருவழியாகச் சமாளித்தார்கள். நடிகைகளும் அமைதியானார்கள்.

’’ ‘உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று எல்லார் முகமும் காட்டி டைட்டில் போட்டார்கள். இதன் பிறகு இந்த டைட்டில் விஷயத்தில் நான் தலையிடவே கூடாது என்றும், என் நடிப்பை ரசிகர்கள் ரசிக்கிறார்களா என்பதே முக்கியம் என்பதிலும் நான் உறுதியாக இருந்துவிட்டேன். ஆனால், ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில், சென்னையில் மட்டும்தான் ‘உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று போட்டார்களாம்.

வெளியூர்களிலும் கிராமங்களிலும் சிவாஜி, ஜெமினிக்கு அடுத்து, சரோஜாதேவியின் பெயரை டைட்டிலில் போட்டதை அடுத்துத்தான் எங்களின் பெயர்களை டைட்டிலில் திரையிட்டார்கள் என்று வெளியூரில் உள்ள நண்பர்கள் பலரும் சொன்னார்கள்.

பெயரில் என்ன இருக்கிறது? டைட்டிலில் என் பெயரே போடாவிட்டாலும், என் ஆத்மார்த்தமான நடிப்பைத்தான் நான் கொடுக்கப் போகிறேன். அதனால்தான், இந்த டைட்டில் பிரச்சினைகளை நான் அதற்குப் பிறகு பெரிதாகவே எடுத்துக்கொள்வதில்லை’’ என்று மனம் திறந்து சொல்லியிருக்கிறார் நடிகையர் திலகம் சாவித்திரி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in