
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்தான ஆருடங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பிரதீப் ரங்கநாதன் முதல் பி.வாசு வரை அவை உச்சரிக்கப்பட்டு வருகின்றன.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படம் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்திலும் ரஜினிகாந்த் தோன்றுகிறார். இதனைத் தொடர்ந்து ’தலைவர் 171’ என்ற டம்மி தலைப்பில் முன்னெடுக்கப்படும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
ஜெயிலருக்கு அடுத்தபடியாக ரஜினிகாந்த் நடிக்க உள்ள திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. ’லவ் டுடே’ வெற்றி திரைப்படத்தினால் கவனம் ஈர்த்துள்ள பிரதீப் ரங்கநாதன், ’டான்’ இயக்கிய சிபி சக்ரவர்த்தி ஆகியோர் இந்த பரிசீலனையில் அதிகம் பேசப்பட்டார்கள். பிரதீப் ரங்கநாதனை அழைத்து ரஜினியே நேரில் பாராட்டியதும் பிரதீப் குறித்தான எதிர்பார்ப்புகள் அதிகம் எழுந்தன.
இதனிடையே சில தினங்கள் முன்னதாக ’ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல், அடுத்த ரஜினி படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின. தற்போது அந்த இடத்தை பி.வாசு பிடித்திருக்கிறார். தொடர்ந்து இளம் இயக்குநர்களின் நடித்து வரும் ரஜினிகாந்த், ஒரு மாற்றத்துக்காக சீனியரான பி.வாசு இயக்கத்தை தேர்வு செய்ததாக தெரிய வருகிறது.
ஏற்கனவே பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் என ரஜினியுடன் இணைந்து பணியாற்றி உள்ளார் பி.வாசு. இவற்றில் குசேலன் தவிர்த்து ஏனைய படங்கள் அனைத்தும் வெற்றி விழா கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. லாரன்ஸ் நடிப்பில் தற்போது சந்திரமுகி-2 திரைப்படத்தை இயக்கி வரும் பி.வாசு, அதனைத் தொடர்ந்து ரஜினியின் ’தலைவர் 171’ படத்துக்கு தயாராவார் என்று சொல்லப்படுகிறது. இந்த இயக்குநர்கள் பரிசீலனையில் லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.