பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ..?

நீங்கா நினைவுகளில் எம்ஜிஆர்!
பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ..?

மக்கள் திலகம் எம்ஜிஆரின் பல படங்களில் நடித்திருப்பவர் இடிச்சபுளி செல்வராஜ். சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். நடிகர் பாண்டு இவருடைய உடன் பிறந்த தம்பி. பாண்டு சிறந்த ஓவியர்; வடிமைப்பாளர். அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பட்ட மேற்படிப்பு படித்தவர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ‘குடை’ இலச்சினையை 1960-களில் வடிவமைத்து அதற்காக, அரசிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பரிசும் பெற்றவர்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பாண்டு. ‘குமரிக்கோட்டம்’ திரைப்படத்தில் ‘எங்கே அவள்..?’ பாடல் முடியும்போது ஜெயலலிதாவின் மிகப்பெரிய ஓவியத்தை எம்ஜிஆர் வரைந்திருப்பது போன்ற காட்சி வரும். அந்த ஓவியத்தை வரைந்தவர் பாண்டுதான்! ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் அப்துல் ரஹ்மான் வேடத்தில் வரும் எம்ஜிஆர் நடத்தும் விடுதியில் அமர்ந்தபடி ஒரு காட்சியில் பாண்டு நடித்திருப்பார்.

Scanned in Chennai R.K. Sridharan

உச்ச நட்சத்திரமாக விளங்கிய எம்ஜிஆருக்கும் பல்வேறு வேடங்களிலும் நடித்து நடிகர் திலகம் என்று பலராலும் பாராட்டப்பட்ட சிவாஜி கணேசனுக்கும் திரையுலகில் 1960-70களில் கடும் போட்டி நிலவியது. தீவிரமான எம்ஜிஆர் ரசிகரான பாண்டுவுக்கு திடீரென ஒரு யோசனை. எம்ஜிஆரை மிகப்பெரிய ஓவியமாக வரைந்துவிட்டார். சிவாஜியின் சின்னச் சின்னப் படங்களைக் கொண்டு வரையப்பட்ட எம்ஜிஆரின் ஓவியம் அது. அதோடு விடாமல் எம்ஜிஆர் மீதான அன்பின் காரணமாக அந்த ஓவியத்துக்கு ‘100 சிவாஜி = 1 எம்ஜிஆர்’ என்று தலைப்பும் கொடுத்து வாரப் பத்திரிகை ஒன்றுக்கும் பாண்டு அனுப்பிவிட்டார். அந்தப் படம் அடுத்த வாரமே வார இதழில் பிரசுரமாகிவிட்டது. இது எம்ஜிஆரின் கவனத்துக்கு வந்தது.

ஓரு படப்பிடிப்பில் இருந்த எம்ஜிஆர், அந்த வார இதழைப் பார்த்துவிட்டு, “இதை வரைந்தவர் யார் என்று விசாரியுங்கள்” என்று அருகில் இருந்த உதவியாளர்களிடம் சொன்னார். அப்போது, பக்கத்தில் இருந்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜ், தயங்கியபடியே, “அது என் தம்பிதான்” என்று தெரிவித்தார்.

அதற்கு எந்த ரியாக்‌ஷனும் காட்டாத எம்ஜிஆர், ‘‘உங்கள் தம்பியை நாளை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இதை தனது தம்பியிடம் சொன்னார் இடிச்சபுளி செல்வராஜ். பாண்டுவுக்கு தலைகால் புரியவில்லை. மறுநாள் எம்ஜிஆரைச் சந்தித்து அவரது பாராட்டைப் பெறப்போகும் மகிழ்ச்சியில் இரவெல்லாம் அவருக்கு தூக்கமே வரவில்லை.

மறுநாள் எம்ஜிஆரைச் சந்திக்க உற்சாகத்துடன் சென்றார் பாண்டு. அவரது பாராட்டு எப்படியிருக்கும், நாம் என்ன பதில் சொல்வது? என்றெல்லாம் மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஆவலோடு எதிர்பார்த்திருந்த எம்ஜிஆர் வந்தார். ஆனால், பாண்டு எதிர்பாராதது நடந்தது. பாராட்டுக்கு பதில் எம்.ஜி.ஆரிடமிருந்து பாட்டுதான் கிடைத்தது.

‘‘உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?’’ என்று அவர் ஆரம்பித்ததும் வெலவெலத்துப் போனார் பாண்டு. ‘‘சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர்? 100 சிவாஜி ஒரு எம்ஜிஆருக்கு சமம் என்று ஓவியம் வரைந்து அதை பத்திரிகைக்கும் அனுப்பி வெச்சிருக்கே. இதை சிவாஜி பார்த்தால் எவ்வளவு வருத்தப்படுவார். இப்படி செய்யலாமா நீ?’’ என்று கோபமாகத் திட்டிவிட்டுப் போய்விட்டார் எம்ஜிஆர். சப்தநாடியும் ஒடுங்கிப் போய் வீடு திரும்பினார் பாண்டு.

எம்ஜிஆரின் கோபம் பாண்டுவை படுத்திக் கொண்டே இருந்தது. தான் செய்த தவறும் புரிந்தது. தலைவரைச் சமாதானப்படுத்த மறுபடியும் ஓவியம் வரையும் முயற்சியில் இறங்கினார் பாண்டு. இந்த முறை மிகவும் எச்சரிக்கையாக, எம்ஜிஆருடன் நடித்த நடிகைகளின் படங்களைக் கொண்டு ‘நம்நாடு’ படத்தின் எம்ஜிஆர் தோற்றத்தை பெரிய ஓவியமாக வரைந்தார்.

இதற்கு என்ன சொல்வாரோ தலைவர் என்று தயங்கியபடியே அதைக் கொண்டுபோய் ‘எங்கள் தங்கம்’ படப்பிடிப்பில் இருந்த எம்ஜிஆரைச் சந்தித்துக் கொடுத்தார் பாண்டு. படத்தைப் பார்த்துவிட்டு தனது டிரேட் மார்க் புன்னகையை உதிர்த்தார் எம்ஜிஆர். அவர் தனக்குப் பிடிக்காத, தவறான செயல்களைச் செய்பவர்களிடம் சட்டென கோபித்துக் கொள்வாரே தவிர, அந்தக் கோபம் நீடிக்காது. கோபம் நியாயமாக இருந்தாலும் கூட, பிறகு ‘ரொம்பக் கோபப்பட்டு விட்டோமோ?’ என்று  நினைத்து கோபத்துக்கு ஆளானவரை மகிழ்ச்சிப் படுத்துவார். இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

இந்த முறை பாண்டு எதிர்பார்த்தது நடந்தது. பாண்டுவின் ஓவியத் திறமைக்காக அவரை பாராட்டு மழையில் நனைத்தார் எம்ஜிஆர். பாண்டுவும் குளிர்ந்துபோனார். அவரை மேலும் குளிர்விக்கும் வகையில் 2 பவுன் தங்கச் சங்கிலியை பாண்டுவின் கழுத்தில் பரிசாக அணிவித்தார் எம்ஜிஆர். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் பாண்டு.

‘‘நமது திறமையும் கலையும் உயர்வானதாக, பிறரை மகிழ்விக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, யாரையும் தாழ்த்தவோ, புண்படுத்தவோ கூடாது’’ என்று அன்போடு பாண்டுவுக்கு அறிவுரை வழங்கினார் மக்கள் திலகம் எம்ஜிஆர்!

டிசம்பர் 24 எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in