கபடி வீரரின் கதை திரைப்படமாகிறது: துருவ் விக்ரம்- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகிறது

கபடி வீரரின் கதை திரைப்படமாகிறது: துருவ் விக்ரம்- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகிறது

துருவ் விக்ரம்- மாரி செல்வராஜ் இணையும் படம் குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இணையும் படம் குறித்தான அறிவிப்பு முன்பு வெளியானது. இதற்கு பிறகு மாரி செல்வராஜ், உதயநிதியுடன் இணைந்துள்ள ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் பிஸியானார்.

தற்போது ‘மாமன்னன்’ படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ‘மகான்’ படத்திற்குப் பிறகு துருவ் விக்ரமும் எந்தப் படங்களிலும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை. இடையில் ‘மனசே’ என தனியிசைப் பாடலுக்கு இசையமைத்து நடித்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார்.

தற்போது துருவ் விக்ரம்- மாரி செல்வராஜ் இணையும் படத்தின் படப்பிடிப்பு குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ‘மாமன்னன்’ போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்ததும் அடுத்த வருடத் தொடக்கத்தில் துருவ் விக்ரமுடன் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் சாதாரண கிராமத்தில் பிறந்து நாட்டுக்குப் பெருமை தேடித்தந்த கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையாக இது உருவாக இருக்கிறது.

துருவ் விக்ரம் விரைவில் கபடிக்கான பயிற்சிகளைத் தொடங்க இருக்கிறார். இந்தப் படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in