
நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், சம்யுக்தா மேனன் எனப் பலரும் நடித்திருந்த திரைப்படம் ‘வாத்தி’. கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இந்தப் படம் பெற்றது.
சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வெளியான 17 நாட்களுக்குள்ளேயே 100 கோடி ரூபாய் வசூலித்தது என படக்குழு அறிவித்தது. இப்போது இந்தப் படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த மாதம் 17-ம் தேதி வெளியாக இருப்பதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்த ’வாத்தி’ திரைப்படத்தை அடுத்து தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.