'அஞ்சாதே' படத்தில் வில்லன் ரோல் கிடைத்தது எப்படி?- நடிகர் பிரசன்னா சொன்ன சுவாரசிய கதை

'அஞ்சாதே' படத்தில் வில்லன் ரோல் கிடைத்தது எப்படி?- நடிகர் பிரசன்னா சொன்ன சுவாரசிய கதை

நடிகர் பிரசன்னா ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழைந்தது, மிஷ்கின் படத்தில் நடிக்க முதலில் யோசித்து பின்பு மறுத்தது, சிநேகாவுடனான குடும்ப வாழ்க்கை, சோஷியல் மீடியா நெகட்டிவ் விஷயங்கள் இவற்றை பற்றி யூடியூப் தளம் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில் பேசி இருக்கிறார்.

அந்த பேட்டியில் அவர், "சினிமாவுக்குள் நடிகராகவே அல்லது வேறு வேலைகளுக்கு முன்பெல்லாம் நுழைவதற்கு மிக கடினமாக இருக்கும். தயாரிப்பாளர்கள் அலுவலகத்திற்கும், இயக்குநர்களிடமும் நமது வாய்ப்புகளுக்காக அலைய வேண்டும். நம்மை நிரூபிக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக எனக்கு அதுபோன்று அலைந்து திரியும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனக்காகவே தானாகவே முதல் பட வாய்ப்பு என்னை தேடி வந்தது என்பதுதான் உண்மை. அதற்கு பிறகு, 'அஞ்சாதே' படத்தில் என்னுடைய வில்லன் கதாபாத்திரம் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்று இருந்தது. ஆனால் அந்த படத்தில் நான் நடிக்க ஒப்பு கொண்டது ஒரு சுவாரசியமான கதை.

இயக்குநர் மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்திற்கு முன்பு அவர் எடுத்த 'சித்திரம் பேசுதடி' உள்ளிட்ட படங்கள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதை நான் நடிகர் நரேனிடம் சொன்னபோது, அவர் என்னை மிஷ்கினை நேரடியாக சந்திக்கும் படி சொன்னார். 'அவரது படங்கள் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அவர் மிகவும் சுவாரசியமான மனிதர். சினிமா பற்றிய தெளிவும் அறிவும் உடையவர்' என்று சொல்லி என்னை சந்திக்கும் படி சொன்னார். அவரை நேரில் சந்தித்து உரையாடிய போது அது எனக்கு புரிந்தது. அப்படி பேசி கொண்டிருக்கும்போது தான், 'அஞ்சாதே' படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொன்னேன்.

என்னை ஆச்சர்யமாக பார்த்தவர், 'டேய், அது வில்லன் கதாபாத்திரம்' என்றார். நான் அதில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியதை பார்த்தவர் ஒரு வாரம் கழித்து என்னை வர சொன்னார். பின்பு எனக்காகவே அந்த கதாபாத்திரத்தை மேலும் டெவலப் செய்தார். படம் வெளியானதும், மக்கள் இந்த இடத்தில் எனக்கு கை தட்டுவார்கள் என்று நான் எதிர்பார்த்த எந்த ஒரு இடத்திலும் கைத்தட்டாதது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், அதற்கெல்லாம் சேர்த்து வைத்து க்ளைமாக்ஸில் எனக்கு கைத்தட்டிய அந்த நிமிடம் மறக்க முடியாதது" என்கிறார்.

குழந்தை பிறப்புக்கு பின்பு சிநேகா நடிப்பது குறித்து பேசிய பிரசன்னா, "நிச்சயம் அவர் நடிப்பார். இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயது. முதல் மகன் இரண்டாவது படிக்கிறார். இன்னும் சில வருடங்கள் போன பின்பு நிச்சயம் நடிக்க வருவார்" என்றார்.

மேலும், "சோஷியல் மீடியாவில் இப்பொழுது எந்தவொரு விமர்சனமும் நேரடியாக பிரபலங்களை பாதிக்கும். அது வெற்றியோ தோல்வியோ, புகழ்ச்சியோ நெகட்டிவ் விமர்சனங்களோ! அதனால் எதுவானாலும் பார்த்து கவனமாக தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும் என்பது முக்கியம். அதை மீறியும் விமர்சனம் வந்தால் ஏற்று கொள்ள வேண்டும்" என்கிறார் பிரசன்னா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in