`மாமன்னன்' படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன?

`மாமன்னன்' படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன?

மாரி செல்வராஜ் படத்தில் நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்த செய்தி தெரிய வந்துள்ளது.

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு இயக்குநர் மாரிசெல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சேலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாவது கட்டத்தை நெருங்கியுள்ள படப்பிடிப்பில் நேற்று நடிகர் பகத் பாசில் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். படம் குறித்த அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் என நடிகர்களின் தேர்வு வித்தியாசமாக உள்ளது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் படத்தில் நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது.

நடிகர் உதயநிதிக்கு வடிவேலு தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவே பெரும்பாலும் அறியப்பட்ட நடிகர் வடிவேலுவுக்கு இந்த படத்தில் அதுபோன்ற கதாபாத்திரம் இல்லை எனவும் படம் முழுக்கவே அவர் சீரியசான கதாபாத்திரத்தில் வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்கிறார். 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடிகர் வடிவேலுக்கு இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. அதற்குப்பிறகு ரெட் கார்ட் விலக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வருபவர், முழுக்க முழுக்க நகைச்சுவை படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாரிசெல்வராஜ் இதற்கு முன்பு 'கர்ணன்', 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகரான யோகிபாபுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருந்தார். அந்த வகையில் வடிவேலுவுக்கு இது போன்ற சீரியஸ் கதாபாத்திரம் என்பது எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in