நடிகை மீனாவின் கணவர் மரணத்துக்கு என்ன காரணம்?- வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகை மீனாவின் கணவர் மரணத்துக்கு என்ன காரணம்?- வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்றிரவு உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நுரையீரல் தொடர்பான பிரச்சினைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை என்று தெரிகிறது. நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

வித்யாசாகருக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து மீனாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்சினை. அதாவது, புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிறபோது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவில் அவருடைய வீட்டின் அருகில் நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டதாக தெரிகிறது. அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்சினை வந்தது.

ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கரோனா பாதிப்பும் சேர்ந்துகொள்ள அதுக்குப் பிறகுதான் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. அண்மையில் மீனா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. தொற்று உடனே சரியானாலும், நுரையீரல் பிரச்சினை வித்யாசாகருக்கு தீரவே இல்லை. சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிற தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தார்கள். ஆரம்பத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவர்கள் கிட்ட இருந்து நுரையீரல் தானம் கிடைப்பதில் ரொம்பவே தாமதமாகும். அதற்கான காத்திருப்பு நேரத்தில், அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்தி விடலாம் என்று முயற்சி செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்து வித்யாசாகர் இறந்துட்டார்’’ என்கின்றனர்.

வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முன்னாள் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் மருத்துவமனை சென்று அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in