`சியான்61’ முதல் கமல்ஹாசன் படம் வரை... பா.ரஞ்சித்தின் திட்டம் என்ன?

`சியான்61’ முதல் கமல்ஹாசன் படம் வரை... பா.ரஞ்சித்தின் திட்டம் என்ன?

நடிகர் விக்ரமின் 61-வது படம் முதல் கமல்ஹாசன் படம் வரை என இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்தடுத்த படங்கள் குறித்தான திட்டம் வெளியாகியுள்ளது.

’சார்பட்ட பரம்பரை’ படத்திற்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித், இயக்கம் மற்றும் தயாரிப்பு என அடுத்தடுத்து பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான ‘சேத்துமான்’ திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து பா.ரஞ்சித் முழுக்க முழுக்க காதல் களத்தை மையமாக கொண்டு எடுத்திருக்கும் திரைப்படமான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு முடிந்து ஜூலை மாதம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இதில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

மேலும், தனது அடுத்த படமான ‘வேட்டுவம்’ பற்றியும் சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவித்தார். இந்த திரைப்படமும் கமல்ஹாசனுடன் உறுதி செய்திருக்கும் திரைப்படமும் மதுரையை பின்னணியாக கொண்ட கேங்க்ஸ்டர் கதை. அடிமட்டத்தில் இருந்து வரக்கூடிய ஒருவன் அதிகாரத்திற்கு எதிராக எப்படி உயர்கிறான் என்ற ஒரு வரியை கதைக்களமாக கொண்டவை.

இதற்கு முன்பு நடிகர் விக்ரமுடன் அறிவித்த ‘சியான்61’ திரைப்படம் கோலார் தங்க வயலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதை. கன்னட நடிகரான யஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப்’ கதைக்களமும் இது போன்றது என்பதால் இதன் இரண்டாம் பாகம் வெளியான பிறகே இதன் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்பு வெளியிட பா.ரஞ்சித் தரப்பில் காத்திருந்தார்கள். இதனையடுத்து வரும் ஜூலை மாதத்தில் ‘சியான்61’ தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படங்கள் மட்டுமில்லாமல், உண்மை கதையை அடிப்படையாக கொண்டு இந்தியில் பா.ரஞ்சித் உருவாக்க உள்ள ‘பிர்சாமுண்டா’ படமும் இருக்கிறது. இந்த படம் மூலம் இந்தியில் ரஞ்சித் இயக்குநராக அறிமுகமாகிறார். இது இல்லாமல், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முன்கதை மற்றும் பின்கதையை அடிப்படையாக வைத்து 90களில் நடக்கும் இணைய தொடராக இயக்கவும் அடுத்த திட்டம் வைத்திருக்கிறார். இந்த படங்கள் எல்லாம் ரஞ்சித் அடுத்த மூன்று வருடங்களுக்குள் முடிக்க இருப்பதாக தனது கேன்ஸ் திரைப்பட விழா பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in