
பாலிவுட் என்று அழைப்பது தவறு எனவும் இந்திய சினிமாவை பற்றி பேசுகிறோம் என்றும் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பெர்லினில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் சொன்னார்.
பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் பிளாக், ஷாவாரியா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். இப்போது ஆலியா பட் நடித்துள்ள ’கங்குபாய் கதியவாடி’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் வரும் 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பெர்லினில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.
பின்னர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ’இந்தியோ, மலையாளமோ, தெலுங்கு திரைப்படமோ அது இந்திய திரைப்படம்தான். பாலிவுட் என்பது பழமையான சொல். அப்படி அழைப்பது தவறானது. இந்திய சினிமாவுக்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். இந்தியப் படங்கள் என்றே உலகுக்கு வெளிப்படுத்துகிறோம். இந்திய சினிமாவில் பல மொழிகள் இருக்கின்றன. ஆனால், அதை பாலிவுட் என்று அழைப்பது தவறு. நாங்கள் பேசுவது இந்திய சினிமா என்பதை நீங்கள் அங்கீகரித்திருப்பதை பாராட்டுகிறேன்’ என்றார்.