‘விஜய் சேதுபதியும் நானும் சத்தியத்தை மீறிவிட்டோம்!’ - லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துகொண்ட ரகசியம்

‘விஜய் சேதுபதியும் நானும் சத்தியத்தை மீறிவிட்டோம்!’ -  லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துகொண்ட ரகசியம்

நாயக பிம்பம் குறித்தெல்லாம் கவலைப்படாத நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. கதைக்குத் தேவை என்றால் கதாநாயகியின் தந்தை வேடத்தைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர் அவர். ‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என பெரிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துத் திரையுலகை ஆச்சரியப்படுத்திவருபவர். குறிப்பாக, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்களில் வில்லனாகவே விஜய் சேதுபதி நடித்திருப்பது பெரிய அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில் இதன் பின்னணியில் இருக்கும் சுவாரசிய விஷயங்களை யூடியூப் தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

“விஜய் நடித்த ‘மாஸ்டர்' படத்துக்குப் பிறகு 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்பதால் விஜய் சேதுபதியே வந்து நடிக்க வாய்ப்பு கேட்டார். ஆனால், அடுத்தடுத்த படங்களில், அதுவும் வில்லன் கதாபாத்திரமே கொடுக்கிறோமே... ஒரே மாதிரி அமைந்துவிடும் என்பதால் நான் தயங்கினேன். ஆனால் இறுதியில் அவருக்கே அந்த வாய்ப்பு அமைந்தது. பின்னர் நாங்கள் இருவரும் இயக்குநர்- வில்லன் என கதையில் வேலை செய்ய மாட்டோம் என சத்தியம் வாங்கிக்கொண்டோம். ஆனால், 'விக்ரம்' படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, 'எப்படியும் அடுத்த படத்திலும் நீ என்னிடம் வருவாய். அதனால் பார்த்துக்கொள்ளலாம்' என்று அந்த சத்தியத்தை வாபஸ் வாங்கிவிட்டோம் என்பதே உண்மை” என்று அந்தப் பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

மேலும்,“உண்மையில், எனக்கு விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை மிகவும் பிடிக்கும். கதாநாயகன், வில்லன் அல்லது முக்கிய கதாபாத்திரமாக எந்தக் கதாபாத்திரம் வேண்டுமானாலும் அவரை நம்பி கொடுக்கலாம். குறிப்பாக, குறும்பட உலகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த கதாநாயகர்களில் அவரும் ஒருவர். இயக்குநர் எனும் வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தால், இந்தப் பக்கம் ஒரு நடிகராக விஜய் சேதுபதி குறும்படங்களில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றியடைந்தார். அப்போதெல்லாம் குறும்படங்களில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்பதற்காக நிறைய கதை தயார் செய்தார்கள். அவரும் பெரும்பாலான குறும்படங்களில் நடித்திருந்தார். அப்போது அவர் நடிப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எங்களைப் போன்றவர்களுக்கு முன்னுதாரணம்" என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in