புத்தாண்டில் 4 புதிய படங்களோடு களமிறங்குகிறோம்! - நயன்தாரா - விக்னேஷ் சிவன்

புத்தாண்டில் 4 புதிய படங்களோடு களமிறங்குகிறோம்! - நயன்தாரா - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன், நயன்தாரா

நாளை பிறக்க இருக்கும் 2022 புத்தாண்டுக்கு அனைவரும் தமது வாழ்த்துகளை பகிர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அதன்படியே ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

கூழாங்கல் அணியோடு...
கூழாங்கல் அணியோடு...

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் அவர்கள் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

‘கடந்த 2021-ம் ஆண்டு எங்கள் ரௌடி பிக்சர்ஸுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. அனைத்து ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஜனரஞ்சகமான படைப்புகளை அளித்திட வேண்டும் என்ற பெருங்கனவோடும் மிகுந்த ஆவலோடும் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனத்துக்கு முதல் ஆண்டே வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருப்பதை உங்களோடு பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.

அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் எங்கள் நிறுவன தயாரிப்பாக அமைந்த ‘கூழாங்கல்’ பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் டைகர் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் வென்று, பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுகளையும் குவித்தது. இப்படம் ஆஸ்கார் விதின் சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான போட்டிப் பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக தேர்வானதும், தற்போது ஃபிலிம் இண்டிபெண்டென்ட் ஸ்பிரிட் விருதுக்கு இறுதிச் சுற்றில் தேர்வாகி இருபபதும் எங்கள் நிறுவனத்தை மேலும் பெருமை அடையச் செய்துள்ளது.

ரௌடி பிக்சர்ஸ் நிறுவன வெளியீடுகளின் இயக்குநர்களுடன்..
ரௌடி பிக்சர்ஸ் நிறுவன வெளியீடுகளின் இயக்குநர்களுடன்..

எங்களின் அடுத்த தயாரிப்பும் முதல் வெளியீடுமான ‘நெற்றிக்கண்’ மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ‘ராக்கி’ திரைப்படமும் வித்தியாசமான படைப்பாக பாராட்டுகளைப் பெற்றது.

இந்த வெற்றிகள் தந்த உற்சாகத்தோடு வரும் 2022 புத்தாண்டில் 4 புதிய படங்களுடன் நாங்கள் களமிறங்குகிறோம். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமாருடன் இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ் நடிக்கும் திகில் படமான ‘கனெக்ட்’, அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கத்தில் கிருஷ்ணகுமார், பாடகி ஜெனிதா காந்தி மற்றும் இளம் நட்சத்திரங்கள் நடிக்கும் ரொமான்டிக் படமான ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ ஆகிய படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் அறிமுக இயக்குநர் அருண் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கும் ‘ஊர் குருவி’ என்றொரு படத்தையும் விரைவில் தொடங்க உள்ளோம்.

ஊர் குருவி குழுவோடு...
ஊர் குருவி குழுவோடு...
நெற்றிக்கண் குழுவோடு...
நெற்றிக்கண் குழுவோடு...

எங்களின் இந்த வெற்றிப் பயணத்தில் உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடகத் துறை நண்பர்கள், ரசிகப் பெருமக்கள் மற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து எங்களின் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று அதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், அந்த வாழ்த்துச் செய்திக் குறிப்போடு நிறுவனத் தயாரிப்பின் நினைவுகளோடான குழுப் படங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் வெளியீடுகளில் இடம்பெற்றவர்களோடு...
ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் வெளியீடுகளில் இடம்பெற்றவர்களோடு...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in